லண்டனில் கிரேன் மீது ஹெலிகொப்டர் மோதி வெடித்து சிதறியது: 2 பேர் பலி (வீடியோ)

லண்டனில் கிரேன் மீது ஹெலிகொப்டர் மோதி வெடித்து சிதறியதில், 2 பேர் பலியாயினர்.

லண்டனில் வாக்ஸ்ஹால் ரெயில் நிலையம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்குள்ள கிரேன் மீது இன்று லண்டன் நேரப்படி காலை 7.30 மணிக்கு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மோதி வெடித்தது.

அதில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால், மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. கிரேன் அருகில் நின்றிருந்த இரண்டு கார்களும் பற்றி எரிந்தன.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த பொலிசார் மற்றும் 22 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் விமானி உட்பட 2 பேர் பலியாயினர், 9 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து வாக்ஸ்ஹால் மற்றும் வாட்டர்லூ ரெயில் நிலையங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே தான் பிரிட்டனின் உளவுப் பிரிவான MI6-ன் தலைமை அலுவலகம் உள்ளது.

கடும் பனிமூட்டம் காரணமாக அந்தக் கட்டிடத்தின் மீது கிரேன் இருந்தது விமானிக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது.