இஸ்லாமாபாத்,-
போராட்ட குழுவினருக்கும், அரசு குழுவினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் பாராளுமன்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.
பாராளுமன்றம் முற்றுகை
பாகிஸ்தானை சேர்ந்த மதகுரு முகமது தாஹிருல் காதிரி. ஊழலில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு பதவி விலகவேண்டும் என்றும், மாகாண அரசுகளையும் கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரி இவர் பல்லாயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு பேரணியாக சென்றார்.அங்கு தாஹிருல் காதிரி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 4&வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. தனது கோரிக்கைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசுக்கு தாஹிருல் காதிரி கெடு விதித்து இருந்தார்.
மீண்டும் கெடு
அந்த கெடு முடிவடைந்த நிலையில் நேற்று அவர் அரசுக்கு 1 மணி நேரம் இறுதி கெடு விதித்தார்.பாராளுமன்றம் அருகே ஜின்னா அவெனியூவில் கூடிய இருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பிற்பகல் 1 மணி அளவில் அவர் பேசுகையில், அரசுக்கு 1 மணி நேரம் அதாவது பிற்பகல் 3 மணி வரை இறுதி கெடு விதிப்பதாகவும், அது முடிந்ததும் எனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பேன் என்றும் அப்போது அவர் கூறினார்.இதனால் இஸ்லாமாபாத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து, தாஹிருல் காதிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத விவகாரங்கள் மந்திரி குர்ஷித் ஷா, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) தலைவர் சவுத்ரி சுஜாத் உசைன், அவாமி தேசிய கட்சியின் தலைவர் அப்ராசியாப் காதாக் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு ஒன்றை பாகிஸ்தான் அரசு அமைத்தது. தாஹிருல் காதிரியுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு அந்த குழுவினரை பிரதமர் பர்வேஷ் அஷ்ரப் கேட்டு கொண்டார்.அதன்படி அந்த குழுவினர் தாஹிருல் காதிரியை சந்தித்து அவரது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
முடிவுக்கு வந்தது
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதை பேச்சுவார்த்தை முடிந்ததும் தாஹிருல் காதிரி அறிவித்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை கேட்டதும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.