இலங்கையின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இலங்கை கடற்படையினால் பல வாரங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாததால், கரையில் இருந்து 12 கடல் மைலுக்கு அப்பால் தப்பிச் சென்று விட்ட ஈரானியக் கப்பலை ஐ.நா சட்டங்களின் படி தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய கைவிரித்துள்ளார்.
அதனுடன் தொடர்பு கொண்டு நிறுத்துவதற்கு முயற்சித்த போதிலும், எந்தப் பதிலும் அளிக்காமல் அது போய் விட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
எம்வி அமினா என்ற அந்தக் கப்பல், ஜேர்மனியின் டிவிபி வங்கி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவுக்கு அமைய, கடந்த டிசம்பர் 12ம் நாள் தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
கப்பலின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய மில்லியன் கணக்கான டொலர்களுக்காக இந்தக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டது.
தப்பிச்சென்ற கப்பல் தற்போது இந்தியாவின் இலட்சதீவு கடற்பகுதிக்குச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தக் கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் 8 இந்தியர்கள் நாடு திரும்பி விட்ட நிலையில் ஈரானிய மாலுமிகளுடன் மட்டும் அது தப்பிச் சென்றுள்ளது.