மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம்’ அறிவிப்பு-
மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழர்களின் எல்லைக் கிராமங்களான வாகனேரி மற்றும் புணானை பகுதிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்து தமிழர் காணிகளை கபளிகரம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் அனைத்து அலுவலகங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்கள், என்பவற்றை புறக்கணித்து போக்குவரத்துச் செய்யாமல் வீட்டில் அமைதியாக இருந்து எதிர்ப்பை தெரிவிக்குமாறு நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று கட்சி பேதமின்றி மட்டக்களப்பு வாழ் அனைத்து மக்களும் அலுவலகங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்கள், என்பவற்றை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
எனவே மேற்படி மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை அங்கீகரித்து தமிழர்களின் எல்லைக் கிராமங்களான வாகனேரி மற்றும் புணானை பகுதிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைக்கும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து அரசாங்க, தனியார் நிறுவனங்களுக்கும், வர்த்தக சங்கங்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரம் தாழ்த்தி தலைவணங்குகின்றோம். தமிழர்களின் பொதுவான பிரச்சினைகளில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் கட்சிபேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும் அந்தவகையில் இந்த முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது என்பதனால் கட்சிகளுக்கு அப்பால் தமிழர்களை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு பொது அமைப்பொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்படுவதையே மட்டக்களப்பு தமிழர்கள் விரும்பகின்றனர் என்பதையே இந்த முழு அடைப்புப் போராட்டம் எமக்கு கூறியிருக்கும் செய்தியாகும் எனவே எதிர் காலத்தில் அரசியலுக்கு அப்பால் அனைத்து கட்சிகள்,பொது அமைப்புக்கள், என்பன ஒன்றிணைந்து ஒரு பொது அமைப்பை உருவாக்கி செயற்பட்டால் மாத்திரமே மட்டக்களப்பு மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முடியும் அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து புத்திஜீவிகளும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

‘மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம்’







