யாழ்.மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்குள் மட்டும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 101 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பகுதி காவல்துறை நிலையங்களின் ஊடாக நடத்தப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறீலங்கா காவல்துறைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.
நேற்றுக் காலை யாழ்.தலமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. மேற்படிச் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட சிறீலங்கா பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பேரேரா யாழ்.மாவட்டத்தில் உள்ள சிறீலங்கா காவல்துறை நிலையங்களில் கடந்த வாரத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை தொடர்பாக புள்ளிவிபரங்களைத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 5 பேர், பொது இடங்களில் வைத்து மதுபானம் அருந்திய 23 பேர், குடிபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்த 16 பேர், சுற்றுச் சூழல் பாதிக்கம் விதத்தில் தமது வளாகத்தை வைத்திருந்த 15 பேர், அனுமதிப்பத்திரம் இல்லாமல் சாரயம் விற்பணை செய்த 18 பேர், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்த 20 பேர், சட்டவிரோதமாக கடல் ஆமையினை பிடித்து இறைச்சிக்கு வெட்ட முயன்ற 2 பேர் ஆகியோரே மேற்படிச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.