அவசரமாக வருகிறது அமெ. உயர்மட்டகுழு; நீதியரசர் பதவிநீக்கம், தீர்வு குறித்து முக்கிய பேச்சு

இவர்களின் வருகை பிரதம நீதியரசர் ஷிராணி பதவிநீக்கப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தி அமைந்தி ருந்தாலும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மாநாடு குறித்தும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலும் இலங்கைத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர் .
கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை குற் றப் பிரேரணை மூலம் பதவியில் இருந்து அகற் றிய விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் கடும் அதிருப்திகளை வெளியிட்டு வரும் நிலையில், அமெரிக்க அரசின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று அவசர பயணமொன்றை மேற்கொண்டு இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அலுவலகத்தின் தெற்கு மற்றும் தெற்காசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் விக்ரம் ஜே சிங் தலைமையிலான இந்தக் குழுவில்,
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலை அதிகாரி ஜிம் பிறவுன் உட்பட மூத்த அதிகாரிகள் அடங்குகின்றனர் என அறியமுடிகின்றது.
இந்தப் பயணத்தின் போது இலங்கை நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான மோதல் மற்றும் பிரதம நீதியரசர் பதவிநீக்க விவகாரம் ஆகியவை குறித்து இலங்கையிடம் உரிய விளக்கங்களை இக்குழு கோரவுள்ளது என்று தெரியவருகிறது.
இவர்களின் விஜயம் பிரதம நீதியரசர் ஷிராணி பதவிநீக்கப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தி அமைந்திருந்தாலும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மாநாடு குறித்தும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலும் இலங்கைத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர் எனத் தெரியவருகிறது.
இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைவரங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கம், கடந்த ஜெனிவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பவை தொடர்பிலும் இக்குழு, இலங்கை அரசிடம் கேள்வி கேட்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், பிரதம நீதியரசர் பதவிநீக்க விவகாரம் சர்வதேச நாடுகளால் பூதாகரப்படுத்தப்படும் நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கக் குழுவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி பாரக் ஒபாமா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் முதல் குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து பேச்சுகளை நடத்தவுள்ள இந்தக் குழு வடக்கிற்கான விஜயமொன்றையும் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கிடப்பில் போடப்பட்டுள்ள தீர்வுத் திட்டப்  பேச்சுகளை மீள ஆரம்பிக்குமாறு அமெரிக்கக் குழு வலியுறுத்தும்  என்றும் அறியவருகிறது.
அத்துடன், இருநாட்டு பாதுகாப்புப் ஒப்பந்தங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இந்தக் குழு பேச்சு நடத்தவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.