4 இலட்சத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய நாய்!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் நாக்செட் மியான். இவரது மகன் அரபு நாட்டில் வேலை செய்து வருகின்றார். தாய்நாடு சென்றதும், சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற ஆசையில், மாதாமாதம் தந்தைக்கு பணம் அனுப்பி வந்தார். மகனுக்கு நல்ல இடத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கிப்போடும் ஆவலில் நாக்செட் மியான் புரோக்கர் மூலம் இடம் தேடி வந்தார்.

அவரது எண்ணம் போல் ரூ.4 இலட்சம் விலையில் ஒரு வீட்டு மனை விற்பனைக்கு வருவதை அறிந்த அவர், மனையை வாங்கும் நோக்கத்தில் கைப்பையில் ரூ.4 இலட்சத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். ´நல்ல காரியத்துக்கு போகிறோம். முகத்தை கழுவிக்கொண்டு போகலாமே´ என்று நினைத்தவர் கைப்பையை வீட்டில் உள்ள கட்டிலின் மீது வைத்துவிட்டு, பின்புறம் உள்ள பம்பில் தண்ணீர் அடித்து முகத்தை கழுவிக்கொண்டு வீட்டுக்குள் திரும்பி வந்தார்.

அவர் வரும் ஓசையை கேட்டதும், கட்டிலின் மீதிருந்த பணப்பையை கவ்விக்கொண்டு ஒரு தெரு நாய், முன்வாசல் வழியாக வெளியே ஓடியது. நாக்செட் மியான் கூச்சலிட்டபடியே நாயை விரட்டிச் சென்றார். ஆனால், நாயின் நாலுகால் பாய்ச்சலுடன் அவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. வாயில் கவ்விய பணப்பையுடன் சந்து, பொந்துகளில் நுழைந்து சில நிமிடங்களில் அந்த நாய், தலைமறைவாகிவிட்டது.

நடந்த சம்பவம் குறித்து, பொலிஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், வீட்டிற்கு அருகாமையில் உள்ள தெருமுனையில் சிதறிக்கிடந்த ரூ.1 இலட்சத்து 40 ஆயிரத்தை நாக்செட் மியானிடம் ஒப்படைத்தனர்.

´கட்டிலின் மீது கிடந்த கைப்பையில் தின்பண்டம் ஏதாவது இருக்கும் என்ற ஆசையில், நாய் அதை கவ்விக்கொண்டு ஓடியிருக்கும்´ என்று கூறும் பொலிசார், ´நாய் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பே இல்லை´ என்றும் கூறினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.