ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் மு.ஆ.சுமன் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதோடு மட்டுமல்லாது நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்தி வரும் வல்வை சுமன் அவர்கள், பிச்சை, மனம், எதிர்வினை உள்ளிட்ட ஐந்திற்கும் அதிகமான குறும்படங்களில் நடித்துள்ளார்.
‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ உலகளாவிய பெருநூலில் ஒருவராக இடம்பெறும் இவர், வாழ்வுதனை தேடி(2008) மரணித்த மனிதம்(2009) முகாரி பாடும் முகங்கள்(2014) ஆகிய கவிநூல்களை வெளியீடு செய்திருக்கிறார்.
‘கலையோடு வாழ்வோம்’ எனும் இசை இறுவட்டினை வெளியீடு செய்த இவர், நடிப்பாற்றலுக்காக சிறந்த நடிகர் விருது(வெண்புறா நிறுவனம் வழங்கியது) பெற்றுள்ளதோடு, ‘இளம் படைப்பாளி’ விருதினை 2009ம் ஆண்டு, வல்வெட்டித்துறை நகர சபையிடமிருந்து பெற்றுக்கொண்டார். எம்மவரை ஊக்குவித்து உயர்த்துவோம்.
இது வல்வை மு.ஆ.சுமன் படைத்த கவிதைகளில் ஒன்று.
இயற்கை நிழல்
காலங் காலமாய்
கடவுள் தந்த சொத்தாய்
இருந்த மரம்
அந்த ஆலமரம்
காக்கைகளின் வீடுகளும்
இங்குண்டு
குயிலினங்களின் கச்சேரிகளும்
இங்குண்டு !
சின்னஞ் சிறுசுகளின்
ஊஞ்சல் விளையாட்டுகளும்
இடம் பெறும் !
காதல் சோடிகளின்
சந்திப்புகளும்
இடம் பெறும் !
சுட்டெரிக்கும் சூரியனின்
தாகத்தை நிறைவேற்றி
எல்லோர்க்கும் நிழல் தந்த
அந்த ஆலமரம் !
திருவிழாக்காலங்களில் ஒலிபெருக்கியையும்
தாங்கிக் கொள்ளும் !
ஒளி விளக்குகளையும்
ஏந்திக்கொள்ளும் !
மழை காலங்களில்
மந்தைகளும்
உறங்கி செல்லும்
மனிதர்களும்
ஒதுங்கி செல்வார்!
ஆனால் . . . .
இன்று அந்த ஆலமரம்
அழிக்கப்பட்டு
அதே இடத்தில்
பயணிகள் நிழற்குடை
அமைக்கபட்டுள்ளது . . . .
வல்வை மு . ஆ . சுமன்