Search

இலங்கையில் சீன ஆதிக்கம் உச்சமடையும் போது ஈழம் உருவாகுமா?

ஆசியாவின் வல்லமை மிக்க கடற்படைகள் என்று பார்க்கும் போது சீனா ஐந்தாம் இடத்திலும் தென் கொரியா முதலாம் இடத்திலும் இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும். ஆனால் இதைச் சொல்பவர் James Holmes என்பவர். James Holmes is professor of strategy at the Naval War College and senior fellow at the University of Georgia School of Public and International Affairs.
James Holmesஇன் ஆசியக் கடல் வலிமை வரிசை 1. தென் கொரியா. 2 ஜப்பான். 3. ஐக்கிய அமெரிக்கா. 4. இந்தியா. 5. சீனா. உலகத்திலேயே ஒப்பில்லாத கடற்படை வலிமையைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படைப் பலம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவினது கடற்படைப் பலத்திலும் வலிமை மிக்கது. கடற்படைகளின் செயற்படு திறனை வைத்துக் கொண்டு பேராசிரியர் James Holmes இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளார்.
உலக வல்லரசுகளின் சீனா மட்டுமே எந்த வித கடற்போரிலும் ஈடுபடாத கடற்படையைக் கொண்டுள்ளது. சீனா இப்போதுதான் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குகிறது. அண்மையில்தான் சீனா விமானம் தாங்கிக் கப்பல்களை தனது கடற்படையில் இணைந்துள்ளது. சீனாவின் கிழக்கிலும் தெற்கிலும் மட்டுமே கடல் இருக்கிறது. இவை ஆழமான கடல் அல்ல.

சீனாவிற்கு ஒரு கடற்பாதை முக்கியம்

சீனாவின் மூலப் பொருள் கொள்வனவிலும் (அதிலும் முக்கியமாக எரிபொருள் கொள்வனவனவில்) அதன் எற்றுமதித் துறைக்கும் ஒரு நீண்ட கடற்பாதை தேவைப்படுகிறது. புராதான காலத்தில் சீனா ஒரு பட்டுப் பாதையை ரோமாபுரிவரை வைத்திருந்தது. உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்துமாக் கடலூடாக நடக்கிறது. சீன எரிபொருள் கொள்வனவின் 85% இந்துமாக்கடலூடாக நடக்கிறது. இந்தப்பாதையில் இலங்கையும் பர்மா எனப்படும் மியன்மாரும் சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்து மாக்கடலின் முத்து என ஒரு காலத்தில் விபரிக்கப்பட்ட இலங்கை சீனாவின் முத்துமாலையிலும் இடம்பெற்றிருக்கிறது. இலங்கையில் ஒரு நீண்டகால அடிப்படையில் சீனா தனது பிடியை மெல்ல மெல்ல இறுக்கி வருகிறது.

இலங்கையை வளரவிட்ட இந்தியா.
1972இல் பாக்கிஸ்த்தானில் இருந்து பங்களாதேசத்தைப் பிரிக்கும் போர் நடக்கையில் இலங்கையூடாக பாக்கிஸ்த்தானியப் போர் விமானங்கள் பறந்து சென்றமை இந்தியவில் விவாதிக்கப்பட்டபோது நிலமை மோசமானால் இலங்கையை தம்மால் ஒன்பது நிமிடத்திற்குள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என இந்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. ஆனால் இன்று இலங்கை பலமிக்க ஒரு படைத்துறையை இந்தியாவின் பணத்தின் மூலமும் பயிற்ச்சியின் மூலமும் கட்டி எழுப்பியுள்ளது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் தன் மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்கட்டும் என்ற கொள்கையுடன் ஈழ விடுதலையை அடக்க தமது பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டனர். இலங்கையை இலங்கை திருமலையில் அமெரிக்கா எண்ணை நிரப்பு வசதிகளைப் பெற முயன்றபோது கொதித்தெழுந்தார். தமிழர்களை இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடச் செய்தார். 1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவரால் சாதிக்க முடிந்தது. தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் சீனா அம்பாந்தோட்டையில் பெரும் துறைமுகம் அமைத்த போது ஏதும் செய்ய முடியாமல் இருக்கின்றனர். சீனா தெற்காசியாவிலேயே உயரமான Lotus Towerஐக் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கொழும்பில் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. இதனால் சீனாவால் இந்தியாவின் எந்தப் பிரதேசத்தையும் வேவு பார்க்க முடியும். இது இந்தியாவைப் பொறுத்தவரை முத்து மாலைத் திட்டத்திலும் ஆபத்தான ஒன்றாகும்.
மீண்டும் கோத்தபாயவின் Masterstroke
போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி” என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் இந்தியாவைப்பற்றிய பல உண்மைகளை அம்பலப்படுத்தினார். அதில் ஒன்று போர் முடிந்த பின் இந்தியா தன்னிடம் உள்ள இலங்கை இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைக் காட்டி இலங்கையை இந்தியா மிரட்ட, கோத்தபாய ராஜபக்கச தன்னிடம் இலங்கையின் போரில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான ஆதாரங்களைக் காட்டிப் பதிலுக்கு மிரட்டினார் என்கிறார். இந்த மிரட்டலை வீ எஸ் சுப்பிரமணியம் துடுப்பாட்டப் பாணியிலும்(கிரிக்கெட்) இராசதந்திரப்பாணியிலும் கோத்தபாயவின் MASTER STROKE என்று வர்ணித்தார். ஆகஸ்ட் மாதம் இலங்கை முடிக்க விருந்த போரை இலங்கை மே மாதத்தில் முடிக்க இந்தியா வற்புறுத்தியாதால் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர் என்றும் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். கோத்தபாய மீண்டும் ஒரு MASTER STROKE விளையாடியுள்ளார். அமெரிக்காவின், இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுக்காக செல்லவிருந்த மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்கவை அமெரிக்கா குறித்த நிகழ்ச்சி திட்டத்துக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தது பற்றிக் கருத்துத் தெரிவித்த கோத்தபாய ராஜ்பக்ச:

அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்தினால், நாம் சீனாவிடமிருந்து தேவையானவற்றை பெற்றுக்கொள்வோம்.

இலங்கையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அமெரிக்கா.

இலங்கையின் நிலைமை தொடர்பாக அமெரிக்கா தனது கரிசனையை கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருவதை நாம் அறிவோம். அத்துடன் 2013 மார்ச் மாதம் நடக்க விருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோத்தபாய ராஜபக்சவின் கருத்து வெளிவந்துள்ளது. அமெரிக்காவால் பன்னாட்டு அரங்கில் இலங்கையை எதுவும் செய்ய முடியாது. மனித உரிமைக்கழகத்தில் கண்டிக்கலாம தண்டிக்க முடியாது. ஆகக் கூடியது அமெரிக்கா தனது உதவிகளை நிறுத்தலாம். கடன்களை நிறுத்தலாம். பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றில் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கலாம். இவற்றை சீனாவால் ஈடு செய்ய முடியும். ஐநா பாது காப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை அமெரிக்காவால் நிறைவேற்ற முடியாது. இதனால் இலங்கையின் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்காவிற்கோ அல்லது இந்தியாவிற்கோ பயப்பட வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவாலோ அல்லது இந்தியாவாலோ அல்லது இரண்டும் இணைந்தோ ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. 2010இல் நடந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்கா இலங்கையில் தனக்கு இசைவான சரத் பொன்சேக்காவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இந்திய் அதிகார மையம்

1980களின் ஆரம்பப் பகுதியில் இலங்கையில் அமெரிக்காவின் தலையீட்டைத் தடுக்க அப்போதைய இந்திரா காந்தியின் அரசு இலங்கைத் தமிழர்களுக்கு படைக்கலன்களையும் பயிற்ச்சிகளையும் வழங்கியது. பலர் இந்திரா காந்தி இறந்தபடியால் பிறகு வந்த ராஜீவ் காந்தி தமிழர்களைக் கைவிட்டது என்று எண்ணுகின்றனர். ஆனால் இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தாலும் ராஜீவ் செய்ததையே செய்திருப்பார். சிங்களவர்களைத் தமது நண்பராக்கி தமிழர்களைக் கைவிட்டிருப்பார். ஆனால் இலங்கையின் ராசதந்திரக் கைக்கூலி போல் இந்தியா செயற்பட்டிருக்க மாட்டாது. தற்போதைய இந்திய அதிகார மையம் இரண்டு இடங்களில் இருக்கிறது. ஒன்று மன்மோகன் சிங் தலைமையிலான மந்திரிசபை. மற்றது சோனியா காந்தியின் வீடு. இரண்டாவதில் சிவ் சங்கர மேனன் போன்ற ஆலோசகர்களும் சில பணமுதலைகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆலோசகர்களுக்கு தமிழர்கள் அடக்கியாளப்பட வேண்டியவர்கள் என்ற மனுதர்ம மனோப்பாங்குடன் இருக்கின்றனர்.பண முதலைகள் இலங்கையை எப்படி பொருளாதார ரீதில் சுரண்டி தம் இலாபத்தைப் பெருக்கலாம் என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர். 22-01-2013இல் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் புதுடில்லியில் செய்து கொண்ட பேச்சு வார்த்தைகளும் உடன்பாடுகளும் இந்த இருதரப்ப்பினரையும் திருப்திப்படுத்துவதாகவே இருந்தன.

அமெரிக்க சீனப் பங்காளிகளின் போட்டி

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடன் தேவையை சீனா பூர்த்தி செய்கிறது. சீனா தனது நாட்டின் வேலையில்லாப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதியில் தங்கியிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை சீனா ஒரு வர்த்தகப் பங்காளி. அதே நேரம் சீனாவின் வளர்ச்சி தனது உலக முதன்மை ஆளுமை நிலைக்குச் சவாலாக அமையுமா என்ற பயம் இருக்கிறது. சீனா இணைய வெளி ஊடுருவல்கள் மூலம அமெரிக்காவின் படைத்துறைத் தொழில்நுட்பங்களையும் மற்றும் வர்த்தகத் துறைத் தொழிநுட்பங்களையும் திருடிவருகிறது என்ற ஆத்திரமும் அமெரிக்காவிடம் இருக்கிறது. சீனா தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் தனது ஆதிக்கத்தைப் பெருக்குவதையும் அங்குள்ள தீவுகளில் உள்ளதாகக் கருதப்படும் வளங்களைத் தனதாக்குவதையும் தனது முன்னுரிமைக்குரிய மூலோபாயமாகக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக ஜப்பான், தாய்வான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவையாவும் அமெரிக்காவுடன் கைகோர்த்து சீனாவை எதிர்க்கும் திட்டத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்கா ஒஸ்ரேலியா, நியூசிலாந்து இந்தியா போன்ற நாடுகளையும் இந்த நாடுகளுடன் இணைந்து ஒரு பெரும் ஆசிய பசுபிக் கூட்டணியை அமைத்து சீனாவைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. அத்துடன் இந்த நாடுகளுக்கு தனது படைக்கலன்களை விற்பனை அதிகரிக்கிறது. ஜப்பானியப் புதிய ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை வர்த்தக ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் அதிகரித்து இவ்விரு துறைகளிலும் சீனாவைச் சமாளிக்க முயல்கிறது.
இரசியாவின் கியூபாபோல் சீனாவிற்கு இலங்கை அமையுமா?
இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரசிய-அமெரிக்க ஆதிக்கப் போட்டியில் கியூபா பெரும் பங்கு வகித்தது. கியூபாவில் இரசியா அணுப் படைக்கலனகளைக் குவிக்க அதனால் தன் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என ஜோன் F கெனடி தலைமையிலான அமெரிக்கா கொதித்தெழ இரு வல்லரசுகளுக்கு இடையில் அணுப் படைக்கலப் போர் மூழும் அபாயத்தை 1962இல் Cuban missile crisis உருவாக்கியிருந்தது. இரசியா தனது அணுப்படைக்கலன்களை கியூபாவில் இருந்து அகற்ற ஒத்துக் கொண்டது. இதன் பின்னர் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் தொடர்ந்த முறுகல் நிலை பனிப்போர் எனப்பட்டது. இப்படி ஒரு நிலை இலங்கையில் ஏற்படுமா? சீனா தனது தந்திரோபாயங்களை மிக நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. அந்த நீண்ட்காலத் தந்திரோபாயத் திட்டத்தில் இலங்கைக்கு சீனா முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்கு இலங்கையின் பூகோள நிலைமட்டும் காரணமல்ல. சிங்களவர்கள் ஆசியப் பிராந்தியத்திலேயே சீனாவின் நம்பகரமான நண்பர்கள். சிங்களவர்கள் அடிப்படையில் இந்தியாவை வெறுப்பவர்கள். அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தையும் வெறுப்பவர்கள். கொழும்பு வாழ் சில பெரும் பணக்காரர்களும் தாராண்மைவாதிகளும் அமெரிக்காவை விரும்பலாம். இப்போது முனைப்படைந்திருக்கும் சிங்களப் பேரினவாதிகளும் பௌத்த மத வெறியர்களும் தங்களது உபாயங்களிற்கு சீனாவைப் பெரிதும் நம்பி இருக்கின்றனர். இந்தியாவை தற்காலிக கருவியாகப் பாவிக்க விரும்புகின்றனர்.

தமிழர்களுக்கு பயன் தருமா?

அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையில் வளரும் சீன ஆதிக்கத்தை இல்லாமல் செய்வதற்காக தமிழர்களைத் தேடி வரும் என்று சிலர் நம்புகின்றனர். இலங்கையில் சீன ஆதிக்கம் உச்சக் கட்டத்தை அடையும் போது தமிழர்களுக்குச் சாதகமான நிலை தோன்றும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சிலர் தமிழர்களுக்கு நாடு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் கனவு காண்கின்றனர். இலங்கையில் சீனாவின் உச்சக்கட்ட ஆதிக்கம் ஏற்பட இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கலாம். அதற்கு முன்னர் சீனாவை தென்சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் சீனா முடக்கப்படலாம். அதன் ஆதிக்கப் போக்கு அங்கே கட்டுப்படுத்தப் படலாம். இது இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குள் நடக்கலாம். தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் மட்டுமல்ல ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றிற்கு எதிராக சீனா வெற்றி பெறுவது எந்த அளவு சாத்தியம். உலகிலேயே மோசமான அயல் நாடுகளைக் கொண்ட நாடு சீனா. வட கொரியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் வெறுக்கும் “நண்பர்கள்”. ஏற்கனவே ஜப்பானுடனும் இரசியாவுடனும் போர் புரிந்து தோல்வியடைந்த நாடு சீனா. இந்தியாவுடன் போரில் வென்றது. இரசியாவுடன் எல்லைப் பிரச்சனை சீனாவிற்கு உண்டு. இந்தச் சூழலில் தென் மற்றும் கிழக்குச் சீனக் கடல்களில் கடற்படை வலுவில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் சீனா வெற்றி பெற்ற பின்னர் இலங்கையில் தனது அணுப்படைக்கலன்களைக் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் நிறுத்தும் போது நடக்கும் போரில் ஈழம் கிடைக்குமா அல்லது வடக்குக் கிழக்கு இணைந்த தன்னாட்சி தமிழர்களுக்குக் கிடைக்குமா? இப்படி ஒரு நிலைமை வரட்டும் என்று நாம் காத்திருந்தால் அந்த நிலைமை வரமுன்னர் இலங்கை முழுக்கச் சிங்களமயமாகி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் சிறுபானமையினராக்கப்பட்டு விடுவார்கள். அமெரிக்காவும் இந்தியாவும் சிங்களவர்களை நண்பராக்குவதற்கு மிகவும் கடுமையான முயற்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர்களை இணக்கப்பாடு என்ற பதத்தைக் காட்டி ஏமாற்றி அவர்களைச் சிங்கள மேலாதிக்கத்திற்கு கட்டுபட வைக்க முயற்ச்சிக்கின்றனர் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் செயல்களும் சொற்களும் எடுத்துக் காட்டுகின்றன. அமெரிக்கா அதிகாராப் பரவலாக்கம் என்ற பதம் பாவிப்பதே இல்லை. அது சிங்களப் பேரினவாதிகளை ஆத்திரப்படுத்தும் என்பதை அவர்கள் அறிவர். அமெரிக்க நிர்வாகம், பாராளமன்றம், படைத்துறைக் கொள்கை வகுப்பாளர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சிங்களவர்களின் நட்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு மாற்று வழிகள் உண்டு.

சீனாவின் கடற்பாதையக் கட்டுப்படுத்துவதாயின் அமெரிக்கா அதை மத்திய கிழக்கின் வளைகுடாப் பிராந்தியந்த்தில் வைத்துச் செய்ய முடியும். இந்துமாக்கடல் போன்ற ஒரு பெரும் கடலில் வைத்து அதைச் செய்வதிலும் பார்க்க வளைகுடா போன்ற ஒரு சிறு கடலில் வைத்து அதை இலகுவாகச் செய்ய முடியும். அங்கு அமெரிக்காவின் தளங்களும் இருக்கின்றன.

அமெரிக்காவிற்கு ஈழத்தில் தளம் தேவையா?

அமெரிக்காவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதன் கடற்படைத் தளத்தை என்பது ஒரு மிதக்கும் தளமாக மாற்றிவருகின்றது. படையினரின் ஓய்வெடுக்கும் மற்றும் அவசர மீள் நிரப்பல்கள் போன்றவற்றிற்கு தென் சீனக் கடற்பிராந்தியத்தில் செய்து கொள்ளலாம். ஈழத்தில் ஒரு தளம் என்பது அமெரிக்கவின் கட்டாயத் தேவை அல்ல.

பன்னாட்டு நிலைமை எமக்குச் சாதகமாக மாறும் என நாம் காத்திருக்க முடியாது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *