வடமராட்சி அல்வாய் மேற்கைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் கப்பம் கேட்டு தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்ட நிலையில் கடந்த வாரம் 35 பவுண் நகை மற்றும் 15 லட்சம் ரூபா பணம் என்பவற்றுடன் காணாமற்போயுள்ளார்.
கப்பம் கேட்டு மிரட்டியவர்களாலேயே இவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்று இவரது கணவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். கனடாவிலிருந்த கணவர் மனைவி காணாமற்போனதையடுத்து பதைபதைத்த நிலையில் நேற்ற வியாழக்கிழமை தனது ஊருக்கு வந்து சேர்ந்துள்ளார்.
தனது மனைவி காணாமற்போனமை முற்றுமுழுதாக சந்தேகத்திற்கிடமானது என்று தெரிவித்துள்ள கணவர் இது குறித்து நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.
க.வசந்தகுமாரி என்ற 29 வயதான குடும்பப் பெண்ணே காணாமற்போனவராவார். இவருக்கு நான்கு வயதான குழந்தையொன்றும் உள்ளது. இவரிடம் கப்பமாக பணம் வழங்குமாறு கேட்டு தொலைபேசி மூலம் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளது. இது போதாதென்று கனடாவில் நின்ற இவரின் கணவரின் தொலைபேசிக்கும் அழைப்பை ஏற்படுத்திய சிலர் பணம் தருமாறும் இல்லாவிட்டால் மனைவியைக் கடத்துவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
ஆயினும் இவர்கள் அது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்திருக்கவில்லை. இவ்வாறிருக்கையிலேயே மனைவி கடந்த வாரம் காணாமற்போயுள்ளார். கணவன் – மனைவியினருக்கிடையே மிக இறுக்கமான அன்புப் பிணைப்பு இருந்தமையால் மனைவி தன்னைவிட்டு பிரிந்து குழந்தையையும் கைவிட்டு வேறெங்கும் சென்றிருக்க மாட்டார் என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்கனவே கப்பமாகப் பணம் கேட்டு அச்சுறுத்தியவர்கள் மனைவியை அச்சுறுத்தி பணத்தையும் நகைகளையும் எடுத்துக்கொண்டு அவரையும் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் பெண்கள் தனிமையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.