கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கடந்த ஆண்டு மார்ச்சில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் பதிலளிக்கும் கடப்பாட்டிற்கான நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என வருகை தந்துள்ள அமெரிக்க உயரதிகாரிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலையையும் விசனத்தையும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் மாலைதீவுக்குமான 8 நாள் பயணத்தை ஆரம்பித்திருக்கும் அமெரிக்க பிரதி உதவி வெளிவிவகாரச் செயலாளர்களான ஜேம்ஸ் முர்ரே, ஜேன் கிம் மர்மான், பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் விக்ரம் சிங் ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம். பிக்கள் எம். ஏ. சுமந்திரன், எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இக்கவலையை கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் மிசேல் சிசனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தூதுவர் சிசனும் தூதரக அரசியல் பிரிவு தலைமை அதிகாரி மைக்கும் கலந்து கொண்டனர்.
காணாமற்போனோர் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை, வடக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள், மீள் குடியேற்றப் பிரச்சினை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இடம்பெறும் கைதுகள் போன்ற பிரச்சினைகள் குறித்து அமெரிக்க உயரதிகாரிகளின் கவனத்துக்கு தாங்கள் கொண்டு சென்றதாக சுமந்திரன், ஸ்ரீதரன் எம். பி. க்கள் நேற்றுத் தெரிவித்தனர்.
தாங்கள் கூறியதை அமெரிக்க அதிகாரிகள் குழு மிகக் கவனமாக செவிமடுத்தாக இந்த இரு எம். பி. க்களும் கூறினர். ஜெனீவாவில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்தும் ஆராயப்பட்டதாகக் கூறிய சுமந்திரன் , ஆயினும் அத்தீர்மானத்தின் தன்மை குறித்துத் தெரிவிக்கவில்லை. சுமார் 1 1/ 2 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பு மிக ஆக்கபூவர்மானதாக அமைந்திருந்ததாக எம். பி. க்கள் இருவரும் கூறினர்.
இச்சந்திப்பில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அமெரிக்கத் தூதுக் குழுவினருக்கு எடுத்துரைத்திருப்பது வருமாறு ;
“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை துளியளவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிரச்சினைகள் ஏற்படும் போது ஆணைக்குழுக்களை அமைப்பதும் அறிக்கை தயாரிப்பதும் பின்னர் கிடப்பில் போடுவதுமான கடந்தகால செயற்பாடுகளே தொடர்கின்றன. இதனை அமெரிக்க அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினோம்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசார சின்னங்கள் அழிக்கப்பட்டு இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.
வட, கிழக்கில் தொடர்ந்தும் அதிகளவு இராணுவப் பிரசன்னம் காணப்படுவதுடன், இரணைமடு முதல் முல்லைத்தீவு வரை படையினருக்கென 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறியவருகிறது. சிங்களக் குடியேற்றம், இராணுவத் தினருக்கான காணி சுவீகரிப்பு என்பவற்றினூடாக தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றி அமைத்து இன விகிதாசாரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எமது கட்சி எம். பி. க்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமை உள்ளது.
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் இதய சுத்தியுடனான வெளிப்பாடு இல்லை. இந்நிலையில் யுத்தத்துக்கு உதவிய சர்வதேசம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கும் உதவ வேண்டும்.
கிளிநொச்சியிலுள்ள எமது கட்சி அலுவலகத்துக்கு கடந்த 12 ஆம் திகதி வந்த 35 பொலிஸார் சோதனை நடத்தி குண்டு மற்றும் ஆபாசப்படம் இருப்பதாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட முடியாதுள்ளனர். இராணுவத்துக்கு தமிழ்ப் பெண்கள் ஏமாற்றப்பட்டு இணைக்கப்பட்டது தொடர்பில் பேசியதாலேயே அவருக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என நாம் உணர்கின்றோம்.
இது தொடர்பில் சபாநாயகரிடம் கூறிய போதும் முன்னேற்றம் எட்டபடவில்லை. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஏதும் தெரியாதுள்ளது.