எகிப்தில் கடந்த ஆண்டு கால்பந்தாட்டம் ஒன்றின்போது ஏற்பட்ட கலவரத்தில் 74 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 21 பேருக்கு எகிப்து நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) காலை மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து, தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள், மற்றும் ஆதரவாளர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள போர்ட் செய்யது நகர சிறைக்கு வெளியே கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலவரத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதாவது, 21 பேருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்! கொல்லப்பட்டவர்களில் இரு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர் என, அரசு எ.வி. சேனல் நைல்-டி.வி. தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. அது, கடந்த ஆண்டு கால்பந்தாட்டம் நடந்த போது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட 74 பேரின் உறவினர்களும், நண்பர்களும் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரம்!
கீழேயுள்ள போட்டோவில், 21 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டதும், மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் பிரிவினர். இந்த விசித்திரமான காட்சியை புரிந்துகொள்ள, இதன் பின்னணி தெரியவேண்டும். அதற்கு அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.