கரையாத நினைவு

 

 

 

1987 இல்

நரபலி வேட்கையில்

இரணகணமானது படுவான்கரை.

 

துப்பாக்கி கத்தி ஓய்ந்த

சில நிமிடங்களில்

கொக்கட்டி மரத்தில்

குருதி வடிந்த அதே மண்ணில்

மீண்டும் குருதி கொப்பளித்தது.

சூரியன் நிறத்தது.

நிலவு நிர்வாணமாய் நின்று அழுதது.

மனிதம்; மகிழடித்தீவுச் சந்தியில்

கேவலமாய் மடிந்தது.

 

அன்று பல்லிகளைக்கொன்று

பசி தீர்த்த

அரக்கர்களின் உரையாடலில்

சிதறிய சிரிப்பொலிகளால்

அரசனின் மரக்கீழிருந்த புனித சிலை கல்லாகியது.

அதிலிருந்த உபதேச ஞான நூல்கள் மூத்திரத்தால் மாசுபட்டன.

 

பாவம்!!! புனருஸ்தானம் செய்து

புனிதமூட்ட ஒருவர்கூட இல்லாமல்

புனிதர்கள் யாவரும் தற்கொலை செய்துகொண்டனர் அன்று.

 

அப்படியாகி இன்றுடன்

கண்ணீரால் இருபத்தாறாண்டுகள் கரைந்தன

கொக்கட்டிச்சோலைப்படுகொலை.

-அரசையூரான்-

Leave a Reply

Your email address will not be published.