Search

மட்டக்களப்பில் கனடா ரொரன்ரோ புளுஸ் வழங்கிய நடை வியாபார வண்டி

மட்டக்களப்பில் கனடா ரொரன்ரோ புளுஸ் வழங்கிய நடை வியாபார வண்டி

நேற்று மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா உலகம் முழுதும் நினைவுகூரப்பட்டது.

இதே தினத்தில் போரால் பாதிக்கப்பட்டவருக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வானது பதுளை வீதி, கரடியனாறு மட்டக்களப்பில் வாழும் கோபாலப்பிள்ளை கஜேந்திரனுக்கு கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் வழங்கப்பட்டது.

மக்கள் திலகம் நூற்றாண்டு விழா நிகழ்வு தினத்தின் விடிகாலைப் பொழுதில் இந்த மூன்று சக்கரங்கள் கொண்ட நடைவியாபார வண்டி வழங்கப்பட்டது மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.

வீதியில் உணவுப்பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக நடைவியாபாரம் செய்வதற்கான முச்சக்கர வாகனம் ஒன்று வழங்கப்பட்டதால் இந்தப் பொருத்தம் காணப்பட்டது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அகில இந்திய சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்ட ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் மூன்று சில்லு ரிக்ஷாவில் ஓடிச் செல்வார், அதுபோல ஒரு சிறந்த தொழிலாளியாக வரவேண்டும் என்ற நம்பிக்கையுடன் ரொரன்ரோ புளுஸ் அமைப்பினால் இந்த உதவி வழங்கப்பட்டது.

இதில் முக்கியமான விடயம் தொடர்ந்து தொழிலை செய்வதற்காக பத்தாயிரம் ரூபா ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.

இந்தப் பணியை ரியூப்தமிழ் நிறுவனத்தின் வடமராட்சிப்பிரிவு வெற்றிகரமாக நடத்திவைத்தது, இதற்காக வல்வையில் இருந்து கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் தலைமையிலான குழு நேற்று புறப்பட்டு, கரடியனாறு சென்று இந்த வாகனத்தை வழங்கினார், சுமார் ஓர் இலட்சம் ரூபா பெறுமதியான உதவி வழங்கப்பட்டது.

இதுபோல சென்ற வாரம் போரினால் பாதிக்கப்பட்டு தற்போது தாண்டிக்குளம் பகுதியில் வாழ்ந்துவரும் பிரதீபன் சிந்துசா தம்பதியர்க்கு பசுமாடொன்று வழங்கப்பட்டது தெரிந்ததே.

பெண் போராளியாக இருந்து கால் நடக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட இந்த இளம் பெண்மணிக்கான வாழ்வாதார உதவியான பசுமாட்டை சுமார் 160.000 ரூபா செலவில் வழங்கினார்கள்.

இது முடிவல்ல உதவிகள் தொடர்கின்றன, அடுத்த வாரம் பசுமாடு வழங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பினர் தற்போது கனடாவில் நிலை கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினரை மூன்று தடவைகள் ரொரன்ரோவில் வைத்து சந்தித்துப் பேசினார்கள்.

தற்போது வவுனியா, கரடிப்போக்கு ஆகிய இடங்களில் வாங்கப்பட்ட பல ஏக்கர் நிலத்தில் புதிய தொழில்களை விருத்தி செய்து தாயக மக்களின் வாழ்வில் புத்தொளி பிறக்க வைக்க ஏற்பாடுகள் கனவேகத்தில் நடைபெறுகின்றன.

இரண்டொரு மாதங்களில் வல்வையைச் சேர்ந்த வர்த்தகக் குழுவினர் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான பேச்சுக்களை முதல்வருடன் மறுபடியும் பேச இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் வழங்கப்பட்ட நடைவியாபார வண்டியின் தொழிற்பாடுகள் சம்மந்தமான அறிக்கை ரியூப்தமிழ் இளைஞர்களால் கண்காணிக்கப்பட்டு வழங்கப்படும்.

வாழ்வாதார உதவி பெற்ற கோபாலப்பிள்ளை கஜேந்திரன் தமது பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வின் ஆதாரத்தை இழந்து எண்ணற்ற மக்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *