கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களால் முல்லை.ஒலுமடு கிராம பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி உதவி

கனடா வாழ் புலம்பெயர் தமிழர் குணா குணரத்தினம் ஒழுங்கமைப்பில் வோட்டலு குவல்ப் வட்டாரம் தமிழ் கலாசாரப் பாடசாலையின் நிதியுதவியுடன் முல்லைத்தீவு- ஒலுமடு கிராமத்திலுள்ள சுமார் 180பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஒலுமடு கிராமத்திலுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் பிரதித் தலைவர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது பாதணிகளை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மாணவர்களுக்கு வழங்கினார்.

ஒலுமடு, அம்பகாமம், புலுமசெனா குளம், அச்சடம்பன் ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியான யுத்தங்களினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதன் மூலம் சுமார் 180வரையான பாடசாலை மாணவர்கள் பயன்பெற்றிருப்பதுடன், உத வியாளர்களுக்கு மாணவர்கள் நன்றிகளையும் கூறியுள்ளனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கருத்துக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மிகுந் த கஸ்டங்களுக்கும், நெருக்குவாரங்களுக்கும், வேலைப்பழுவுக்கு மத்தியிலும் எங்களுடைய அடுத்த தலைமுறையாகிய இன்றைய மாணவர்கள் உரியமுறையில் கல்வி கற்கவேண்டும்,

அதற்கான பங்கை நாம் கட்டாயமாகச் செய்யவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு எங்கள் புலம்பெயர் சொந்தங்கள் இந்த உதவிகளை எமக்கு வழங்குகின்றார்கள். எனவே நாம் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் நன்றிக் கடன் என்பது எங்களுடைய உயரிய வாழ்க்கையே,

நாம் செம்மையான, இனப்பற்றுள்ள, நல்ல தீர்க்கதரிசனங்களுடன் கூடிய கல்விமான்களாக, சிந்தனையாளர்களாக உருவாக வேண்டும், அதுவே உலகத்தின் எங்கோவொரு மூலையில் இருந்து கொண்டு எங்களைப் பற்றிச் சிந்திக்கும் நல்ல மனிதர்களுக்கு நாம் கொடுக்கும் பிரதிபலனாக இருக்கும். அதனை வளரும் தலைமுறையினராகிய நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் என்னிடம் ஆழமாக இருக்கின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.