வன்னியில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள புதுமுறிகண்டி பிரதேசத்தில் போர் வீட்டுத் திட்டம் என்ற பெயரில் இராணுவ குடியிருப்பு அமைக்கப்பட்டு சிங்களக் குடும்பங்கள் எதிர்வரும் 11ம் திகதி முதல் குடியேற்றப்படவுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவசர அவசரமாக அப்பகுதிகிளில் புதிய பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் கட்டப்பட்டு வருகின்றது என்றும் தெரியவந்துள்ளது.
முறிகண்டிப் பகுதியில் தமது காணிகளை அபகரித்த பொழுது அதற்கெதிராக கடுமையாக மக்கள் போராடி வந்தனர். குறிப்பிட்ட பகுதியை கால் ஏக்கர்படி மக்களுக்கு பகரிந்தளித்துவிட்டு ஏனைய காணிகளிலும் அதற்குப் பின் பகுதியில் உள்ள காடுகளிலுமே இந்த இராணுவக்குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரைகளை விடுத்து வரும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வடமாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியை இதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறிகண்டிப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டு வந்த குடியிருப்பு வீடுகள் எதற்காக கட்டப்பட்டுவருகின்றதென்ற பரபரப்பு நிலவியே வந்துள்ளது. எனினும் அவை படையினரது குடும்பங்களினை போர் வீட்டுத் திட்டம் என்ற பெயரில் குடியமர்த்தவேயென மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டே வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவை படையினரது குடும்பங்களுக்கேயென தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வரையான வீடுகள் அவைக்கான போக்குவரத்து மார்க்கங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுமிருந்தது. தற்போது அப்பிரதேசத்தை வெலி ஓயாவுடன் இணைக்கும் வகையில் புதிய பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. முறிகண்டி ஆலயப் பகுதியிலிருந்து கொக்காவில் வரையான காட்டுப் பகுதியில் இந்தக் குடியிருப்புக்கான போக்குவரத்திற்கான பெரும் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாய செழுமை மிக்க இம்மண்னில் படையினர் பண்ணைகளை அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட மக்கள் அருகிலுள்ள பகுதிகளில் முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்த மக்களை கடுமையாக இழுத்துத்தடித்து கடும் நடவடிக்கைகளை இராணுவத்தரப்பு மேற்கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த மக்களை மீள்குடியேற்றுவதாக அழைத்து வந்து காணிகளை பறிக்க வற்புறுத்தியுடன் பலவந்தமாக மெனிக்பாம் முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
காலப்போக்கில் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதாக இராணுவத்தினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த மக்களின் காணிகளுடன் பல ஏக்கர் நிலப்பகுதியில் சிங்களக்குடியேற்றத்தை மேற்கொள்ளும் நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தடன் உள்ளனர். தமது நிலப்பகுதியில் சிங்களக்குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
படையினரது குடும்பங்களுக்கான குடியேற்றதிட்டம் எனக் கூறப்பட்டு இச் சிங்களக்குடியேற்றத்தை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி மகிந்தராஜபக்சவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் வருகை தரவுள்ளதாகவுள்ளகாவும் இராணுவத் தரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன.