இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்கும்!– அமெரிக்கா உறுதி

ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா பூரண ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பில் இதனை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர்,

இந்தத் தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கோரும் 2012ம் ஆண்டு தீர்மானத்தை இது அடிப்படையாக கொண்டிருக்கும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட, மக்களுக்கான தனது கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இந்தத் தீர்மானம் மூலம் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக நிற்கும்.“ என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்தியா இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும் சமீபத்திய உயர்மட்ட சந்திப்புகளில் இந்த விவகாரம் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.