அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 வயதுப்பெண் அடையாளம் தெரியாத நபரால் சிகாகோவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த வாரம் ஒருவர் தனது துப்பாக்கியால் பூங்காவில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியரைச் சுட்டுக்கொன்றார். இதில் ஹதியா என்ற 15 வயதுச் சிறுமியும் உயிரிழந்தாள்.
இவர் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இந்தப் பூங்கா ஜனாதிபதி ஒபாமாவின் சிகாகோ வீட்டுக்கு ஒரு மைல் தொலைவில் இருந்தது.
சிகாகோவில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது அரசுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.
2012ம் ஆண்டில் மட்டும் சுமார் 506 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 40 கொலைகள் இந்நகரில் நடந்துள்ளன.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஹதியாவின் குடும்பத்தாருக்காக ஜனாதிபதி ஒபாமா இறைவனை வேண்டினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜே.கார்னே கூறுகையில், சிறுவர் சிறுமிகள் வன்கொலைக்கு ஆளாக்கப்படும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
நம்மால் நாட்டில் நடக்கும் அனைத்துக் கொடுமையையும் நிறுத்த இயலாது என்றும் ஆனால் குழந்தைகள் சாவதை நம்மால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஒபாமா தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.