எந்த விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படாமல் நாங்கள் நட்டாற்றில் தவிக்கவிடப்பட்டுள்ளோம். மீள்குடியமர்வு என்ற பெயரில் எம்மைக் காட்டுக்குள் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு நேற்று வியாழக்கிழமை தம்மைச் சந்திக்க வந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் அலஸ்ரயர் பேர்ட்டிடம் தமது அவலங்களை எடுத்துக் கூறினார்கள் கோப்பாபிலவு மக்கள்.
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் நேற்றுத் தமது முதல் பயணமாக முல்லைத்தீவுக்குச் சென்றார். அங்கு அவர் முள்ளியவளையில் இலங்கை இளைஞர் நல்லிணக்க நம்பிக்கை நிதியத்தைத் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு கேப்பாபிலவு சூரியபுரம் காட்டுப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளைப் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை அவர் நேரில் கேட்டறிந்தார். அதன்போது தமது மனக்குமுறல்களை மக்கள் அமைச்சரிடம் வெளிட்டனர். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் நாங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுத் தவிர்க்க விடப்பட்டுள்ளோம். அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
போக்குவரத்து, கல்வி, சுகாதார வசதிகள் இல்லாமல் பெண்களும், சிறுவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எமது நிலையை எவரும் கவனிப்பதில்லை என அந்த மக்கள் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரிடம் தமது மனக்குறைகளை எடுத்துக் கூறினார்கள்.
மக்களின் கருத்துக்களைக் கவனமாகச் செவிமடுத்த அமைச்சர் அங்குள்ள நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்தார். அமைச்சர் கேப்பாபிலவுக்குப் பயணம் செய்த வேளை அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான படைப்புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.