மகிந்த ராஜபக்சவை எதிர்த்து திருப்பதியிலும் கறுப்புக்கொடி போராட்டம்!- வைகோ அறிவிப்பு!

மகிந்த ராஜபக்சவை எதிர்த்து திருப்பதியிலும் கறுப்புக்கொடி போராட்டம்!- வைகோ அறிவிப்பு!
இலங்கை அதிபர் திருப்பதி வர உள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிராக அங்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் தன்மான உணர்ச்சிக்குச் சவால் விடும் திமிரோடு, தமிழ் மக்களின் இருதயத்தில் சூட்டுக்கோலைத் திணிப்பது போல, தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள, இந்துக்கள் வழிபடும் திருத்தலமான திருப்பதிக்கு மகிந்த ராஜபக்சவை அழைத்து வந்து வரவேற்கும் அக்கிரமத்தையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது.

இலங்கையில், 1607 இந்துக் கோவில்களை உடைத்ததாக, சிங்கள அரசு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு உள்ளது.

ஆனால், 2100 க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள், சிறுசிறு ஆலயங்கள், குலதெய்வங்களை கடந்த பல ஆண்டுகளில் சிங்களவர்கள் உடைத்து நொறுக்கிப் பேயாட்டம் ஆடினார்கள்.

திருகோணமலை சிவன் கோவில் தேரைச் செய்த தச்சர்களை, நடுத்தெருவில் மணிக்கட்டை வெட்டிக் கொன்றார்கள். இந்துக் கோவில் பூசாரிகளைக் கொன்றார்கள்.

இதையெல்லாம் இந்திய நாடாளுமன்றத்திலேயே பேசி நான் பதிவு செய்து இருக்கின்றேன்.

ஏன், இந்துக்கள் பெரிதாகப் போற்றுகின்ற விவேகானந்தர், சிகாகோ உலக சமயங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்பும்போது, புத்த பிக்குகள், சிங்களவர்கள், அனுராதபுரத்தில் செருப்பாலும், கல்லாலும் விவேகானந்தரை அடித்து விரட்டினார்கள்.

சிவன் கோவில், முருகன் கோவில், துர்க்கையின் கோவில்களை எல்லாம் உடைத்து நொறுக்கிய, சிங்கள இனவெறிக் கூட்டத்தின் அதிபர் ராஜபக்ச அரசுதான், இப்போதும் தமிழர்கள் வழிபட்டு வருகின்ற கோவில் வளாகங்களில் சிங்கள இராணுவத்தை நிறுத்தி இருக்கின்றது. அங்கே பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றது.

இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்குபவனான ராஜபக்ச, திருப்பதி கோவிலுக்கு உள்ளே நுழைவதை அனுமதிக்கலாமா?

ராஜபக்ச பீகாருக்கும் சென்றான். ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்று வழிபட்டான்’ என்று உலகத்துக்குச் சொல்லுவதற்காக, திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு, இந்தத் துரோகத்திலும் அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, இந்தியாவுக்கு ராஜபக்சவை அழைத்து வருகின்ற, காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசைக் கண்டித்து, டெல்லியில் பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டம், திட்டமிட்டபடி பெப்ரவரி 8ம் தேதி நடைபெறும்.

திருப்பதியிலும் ராஜபக்ச வருகையை எதிர்த்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பெப்ரவரி 8 ஆம் தேதி, கறுப்புக்கொடி அறப்போராட்டம் நடைபெறும்.

மானம் அழிந்து விடவில்லை தமிழ்க் குலத்துக்கு என்பதை உணர்த்தும் விதத்தில், கழகத் தோழர்களும், தமிழ் மான உணர்வாளர்களும் இந்தக் கறுப்புக்கொடி கண்டன அறப்போரில் பங்கு ஏற்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

Leave a Reply

Your email address will not be published.