Search

ஐநா பேரவையில் சாவுமணியை செவிமடுக்கவுள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான நெருக்கடிகள் குவிகின்றனவா?

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகத்திற்குள் வரும் மனித உரிமைகளுக்கான பேரவையில் மிக விரைவில் இலங்கை அரசிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளும் அதை ஒட்டிய வாக்கெடுப்புக்களும் நடத்தப்படவுள்ள நிலையில் 2013ம் ஆண்டின் பகல்களும் இரவுகளும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

மேற்படி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசின் கொடூரமான மனிதப் படுகொலைகளுக்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுத்து அத்துடன், மகிந்தாவின் அரசிற்கு உலக அளவில் மங்கிப் போகின்ற ஒரு பாதையைக் காட்டுவதற்கு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு செயலூக்கம் பெற்று இயங்கி வருவதும் நமக்கு நம்பிக்கைகளை அளித்து வருகின்றது.   இந்த வகையில் இலங்கை அரசிற்கு மேற்படி பேரவையின் நடவடிக்கைகள் மூலம், சாவுமணி அடிக்க வேண்டிய சந்தர்ப்பங்களை அனைவரும் ஏற்படுத்த வேண்டும் என்பதே நியாய விரும்பிகளின் தற்போதைய அவசியத் தேவை என்பதையும் நாம் உணர வேண்டும்.   இவ்வாறாக சாவுமணியை செவிமடுக்கும் வகையில் இலங்கை அரசிற்கு தொடர்ச்சியான நெருக்கடிகள் குவிகின்றனவா என்ற கேள்வியை நாம் நம்மிடத்திலே கேட்டால் அதற்கு சாதகமான பதிலே கிடைக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.   இவ்வாறான நமது சிந்தனைகளுக்கு முத்தாய்ப்பு வைத்தது போல பல மேற்குலக நாடுகளில் “காரியங்கள்” பல நடைபெறத் தொடங்கியுள்ளன. உலகின் எசமான் என்று நாம் கருதுகின்ற அமெரிக்காவின் இரண்டு செனட்டர்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.   அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடத்தினை வகிக்கும் பெற்றிக் லேஹி மற்றும் போப் கசே ஆகிய இரு செனட்டர்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை இலங்கையரசிற்கு தற்போது இருந்தே மனக்கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.   மேற்படி அமெரிக்கச் செனட்டர்கள் இருவரும் தங்கள் அறிக்கையில் போர்க்குற்ற விடயத்தில் இலங்கை போதிய கவனத்தை செலுத்தவில்லை. அத்துடன் அவர்கள் தமது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.   அரசியல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் இலங்கையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் காலத்தாமதம் செய்வது ஒருபக்க நடவடிக்கையை உணர்த்துவதாகவும் எனவே சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்று மேற்படி அமெரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் கோரியுள்ளனர்.   இது இவ்வாறிருக்க இலங்கையிலும் எப்போதும் அச்சமின்றி தனது கருத்துக்களை இலங்கை அரசிற்கு எதிராக முன்வைத்து வருகின்ற தென்னிலங்கை அரசியல்வாதி கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னாவும் தனது ஆணித்தரமான கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.   மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பல நாடுகள் ஆதாரங்களை குவித்து மகிந்தாவின் ஆட்சியை அப்புறப்படுத்தவுள்ளதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில,    அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்த அமைச்சர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு குற்றப் பிரேரணைக்கு முட்டுக்கட்டை கொடுத்தவர்களுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.   இது குற்றப் பிரேரணைக்கு கிடைத்த பரிசாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை பெற்றுக்கொள்வதற்காகவே பிச்சைக்காரனின் புண்ணை போல கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தாமல் வைத்துக்கொண்டே இருக்கின்றது.   அத்துடன் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பிலான அழுத்தங்களை அமெரிக்காவும் இந்தியாவும் கொடுத்துக்கொண்டு இருக்கின்ற நிலையிலேயே அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   இவற்றையெல்லாம் நாம் பார்க்கின்றபோது எதிர்வரும் மாதங்களில் இலங்கை அரசு “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைக்கும் வந்துவிடுமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.   எனவே புலம் பெயர் தமிழர்களும் தமிழர் அமைப்புக்களும் இந்த தடவை இலங்கை அரசின் கழுத்துக்கு கயிற்றை வீசும் வகையில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றே நாம் வேண்டிக் கொள்கின்றோம்.
Leave a Reply

Your email address will not be published.