இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அத்துடன், யாழ். தொண்டமானாறு தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான உயர் பாதுகாப்பு வலயங்களினுள் அமைந்துள்ள வீடுகள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
வலி. வடக்கில் இருந்து 23 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் 7 ஆயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 328 பேர் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் வீடுகளே இவ்வாறு தற்போது இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருகின்றன.
இதனை தடுத்து நிறுத்துவது தொடர்பாக வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறிதரன், ஆகியோருடன் வலி. வடக்கு பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் வலி. வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இக் கலந்துரையாடலில் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்பாடாத பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்த முடிவு செய்யப்பட்டது.