ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளைக் கொண்டுவர அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் முயற்சித்தால் இலங்கை அதனைத் தடுத்து நிறுத்தும். இலங்கை இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தாம் தெளிவுபடுத்திக் காட்டவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றைக் கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி குறித்து இதுவரை தமக்கு எவ்விதமான உத்தியோகபூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூர் கூறியிருந்தார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கருணாதிலக அமுனுகம, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் காணப்படுகின்றன. இரு நாட்டுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் மேலும் பலப்படுத்தப்படுகின்றன என்றார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு முன்னர் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறுகிய காலத்துக்குள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி அதில் அரசாங்கம் வெற்றி கண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றித் தெரியும். அரசின் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் திருப்தி வெளியிட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு எதிராக பல நாடுகளால் பல கோணங்களில் சவால்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை முறியடிப்பதற்கு இலங்கைக் குழுவினர் தயாராகவே இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம மேலும் தெரிவித்தார்.