சிரியாவில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்து வருகிறது.
அலெப்போ நகரில் நேற்று கிளர்ச்சியாளர்கள் மீது சிரியா நாட்டு ராணுவத்தினர் வான் வழித்தாக்குதல் நடத்தினர்.
இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
சிரியாவில் ஜனாதிபதி பஸர் அல் அசாத்துக்கெதிராக போராடிவரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
ராணுவத்தினரால் தாக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்தவர்களுக்காக சிரியாவின் எல்லைப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் தற்காலிக தங்கும் முகாம்களுக்கு அருகிலும், விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய இந்த கிளர்ச்சியில் 2013ம் ஆண்டு தொடக்கம் வரை 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய நாட்டு போர் முடிவுக்கு வராத நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.