ஜெனிவா மனித உரிமை பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கும் பிரேரணையை சாதாரண விடயமாகக் கருத முடியாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மூலம் பொருளாதாரத் தடையை விதிக்கும் யோசனை முன்வைக்கும் சாத்தியமும் காணப்படுவதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரேரணை தொடர்பாக பேராசிரியர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் 22 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் மற்றுமொரு பிரேரணையை சாதாரண விடயமாகக் கருதமுடியாது.
இதன்மூலம் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஐ.நா சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியமுள்ளது. இந்த நிலைமையை புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவு மக்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்வர்.
எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதாக சர்வதேசத்துக்கு வலியுறுத்திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற்கான வழி.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைக் கூட்டி அரசியல் தீர்வை விரைவாகக் காண்பதன் மூலமே இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெறமுடியும் என்றார்.
இதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைகளைக் கொண்டு வர அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் முயற்சித்தால் சிறிலங்கா அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு தயாராக உள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தாம் தெளிவுபடுத்திக் காட்டவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையொன்றைக் கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி குறித்து இதுவரை தமக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.