ஜெனீவாத் தீர்மானத்திற்கு ஆதரவு கோரி இந்தியா சென்றது அமெரிக்கக் குழு!?

ஜெனீவாத் தீர்மானத்திற்கு ஆதரவு கோரி இந்தியா சென்றது அமெரிக்கக் குழு!?

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு புதுடில்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டு அங்கு பேச்சு நடத்தியுள்ளது. இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் மூவரும் இலங்கைப் பயணம் முடிந்த கையோடு புதுடில்லி சென்று பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

அந்தப் பேச்சுக்களின் போது ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை மீதான பிரேரணை குறித்து அமெரிக்க அதிகாரிகள் புதுடில்லிக்கு விளக்கமளித்துள்ளனர் என்று தெரியவருகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாத்தாய், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட டில்லி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளை இந்தக்குழுவினர் சந்தித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நோக்கம், அதற்கு இந்தியாவின் ஆதரவு, தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை, இலங்கைப் பயணத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் உட்பட முக்கிய பல விவகாரங்கள் தொடர்பில் இச்சந்திப்புகளின் போது கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கை இன்னும் பின்னடைவான நிலையிலேயே இருக்கின்றது. எனவே, நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கு இலங்கையை ஊக்குவிக்கும் வகையிலேயே இம்முறை பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது என இந்திய இராஜதந்திரிகளிடம் அமெரிக்கக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கக் குழுவுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளின்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும் கலந்துகொண்டிருந்தார்.
இலங்கைக்கும், மாலைதீவுக்குமான உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு மூவரடங்கிய அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவினர் கடந்த  2 ஆம் திகதி இலங்கை வந்தனர்.
அமெரிக்கப் பிரதி உதவி வெளிவிவகாரச் செயலாளர் ஜேம்ஸ் மூர், பிரதி உதவிப்பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் சிங், பிரதி உதவி வெளிவிவகாரச் செயலாளர் ஜேன் சிம்மர்மான் ஆகியோர் மூவரடங்கிய இராஜதந்திரக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.
கொழும்புக்கு விரைந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னரே இக்குழு அரச மட்டத்திலான அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராஜதந்திரக்குழுவின் பயண நிகழ்ச்சி நிரலில் இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பயணம் குறித்த விடயங்களே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக அதுவும் இலங்கைப் பயணம் முடிவடைந்த கையோடு அமெரிக்கக்குழு டில்லி சென்றுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published.