விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தில், இந்தியா ராணுவ ரீதியாக இலங்கைக்கு உதவியது என்று பலத்த குற்றச்சாட்டுகள் உண்டு. என்ன உதவி செய்தது டில்லி என்று கேட்டால், பலருக்கு விபரம் தெரியாது.

“இந்திய ராணுவத்தை அனுப்பியது” என்றுகூட சிலர் சொல்கிறார்கள். அந்த தகவலை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

விடுதலைப் புலிகளுடன் செய்த இறுதி யுத்தத்துக்காக இலங்கை அரசு, புது டில்லியிடம் என்ன கேட்டது? புது டில்லி என்ன கொடுத்தது என்ற விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகளை தாக்குவது தொடர்பான விபரமான ஆவணம் ஒன்றை இலங்கை தயாரித்திருந்தது. அதில் விடுதலைப் புலிகளின் பலம் பற்றிய இலங்கை உளவுத்துறைகளின் கணிப்புகள், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தேவையான ஆயுதங்கள், மற்றும் யுத்த சாதனங்கள் எவை என்ற விபரங்கள் அனைத்தும் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு போர் திட்டத்தின் ‘விஷ்-லிஸ்ட்’ அது.

இலங்கையின் அந்த ஆவணம் இந்தியாவிடம் முதலில் கொடுக்கப்பட்டது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவே நேரில் டில்லி சென்று அதை கொடுத்தார். “Military assistance required from the government of India” என்பதே ஆவணத்தின் பெயர்.

இந்தியாவோ, இலங்கையோ, இந்த ஆவணத்தை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிட்டதில்லை. ஆவணத்தின் ஒரு பிரதி சமீபத்தில் எமக்கு கிடைத்தது.

விடுதலைப் புலிகளின் பலம் என்ன என்பது பற்றிய சர்ச்சைகள் நீண்டகாலமாகவே இருந்து வந்தன. ஒவ்வொருவர் ஒவ்வொரு கணிப்பீடு செய்து வைத்திருந்தனர். அதேபோல, இலங்கை உளவுததுறைகளும், தமது கணிப்பீட்டை செய்திருந்தது. அந்தக் கணிப்பீடு இந்த ஆவணத்தில் உள்ளது.

விடுதலைப் புலிகள் பற்றிய இலங்கை உளவுத்துறைகளின் கணிப்பீடு சரியான கணிப்பீடா, இல்லையா என்பதை நீங்களே சொந்தமாக முடிவு செய்து கொள்ளவும். காரணம், பலர் இது தவறான கணிப்பீடு என்பார்கள். நமக்கேன் வம்பு?

ஆனால், ஒரு விஷயம் தெரியும். இந்த கணிப்பீட்டின் அடிப்படையில், யுத்தத்தை நடத்தியது இலங்கை ராணுவம். இந்த கணிப்பீட்டின் அடிப்படையில், உள்ள புலிகளின் பலத்தை ஒடுக்க தேவையான ஆயுதங்களை பெற்று யுத்தம் புரிந்தது, இலங்கை ராணுவம். யுத்தத்தின் முடிவு நீங்கள் அறிந்ததே. கணிப்பு சரியா, தவறா, என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளவும். .

இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஷபக்ஷே 2005-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பதவியேற்றார். அது நடந்து சரியாக 1 வாரத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தமது மாவீரர் தின உரையை நிகழ்த்தினார்.

இந்த மாவீரர் தின உரை என்பது, ஒவ்வொரு ஆண்டும் பிரபாகரன் ஆற்றும் கொள்கை ரீதியான அறிவிப்பு. அவரது இறுதி மாவீரர்தின உரை 2008-ம் ஆண்டு நவம்பரில் வெளியானது (இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிந்தது).

மகிந்த ராஜபக்ஷே ஜனாதிபதியாக பதவியேற்றதும், பிரபாகரன் ஆற்றிய உரையில், “புதிய ஜனாதிபதி யதார்த்தவாதி என அறிகிறோம். இதனால், இவருக்கு சிறிது கால அவகாசம் கொடுத்து பார்க்கலாம்” என்றார். ஆனால், அப்படியொரு கால அவகாசமும் கொடுக்கவில்லை.

டிசம்பர் 23-ம் தேதி மன்னாரில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் குண்டு வெடிப்பில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டனர். டிசம்பர் 27-ம் தேதி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் குண்டு வெடிப்பில் 11 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

தமக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் 1 மாதம்கூட இல்லை என்று புரிந்து கொண்ட ராஜபக்ஷே அதே டிசம்பர் 27-ம் தேதி, டில்லிக்கு புறப்பட்டார்.

அவரது கையில் இருந்த ஆவணம்தான், நாம் குறிப்பிட்ட “Military assistance required from the government of India”.

இந்த ஆவணம், விடுதலைப் புலிகளை யுத்த களத்தில்தான் இனி சந்திப்பது என்ற இலங்கையின் முடிவை டில்லிக்கு தெளிவாக சொன்னது. புலிகளின் பலம் பற்றி தாம் வைத்திருந்த தரவுகள், அந்த பலத்தை முழுமையாக ஒடுக்குவதற்கு தமக்கு தேவைப்படும் ராணுவ உதவிகள் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்ட ஆவணம், முழுமையான உதவிகளையும் இந்தியாவிடம் கோரியது.

இது நடந்தது, 2005-ம் ஆண்டு இறுதியில் என ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, புலலிகளின் அப்போதைய பலம் பற்றிய இலங்கையின் கணிப்பீட்டை பார்க்கவும்.

– விடுதலைப் புலிகளிடம் உள்ள முழுமையாக பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை, 12,000.

– தற்போது, மாதம் ஒன்றுக்கு 250 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

– இது தவிர, சிவிலியன்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இவர்களை காவலரண்களில் காவலுக்கு பயன்படுத்துவார்கள். தவிர, படை பெரிதுபடுத்தலுக்கும் (force multiplier) இவர்களை பயன்படுத்த முடியும்.

– புலிகளிடம் உள்ள கனரக ஆயுதங்களின் (எந்திரத் துப்பாக்கிகள் சேர்த்தியில்லை) எண்ணிக்கை, 700. கீழே குறிப்பிடப்படும் கனரக ஆயுதங்கள் இந்த எண்ணிக்கைக்குள் அடக்கம்.

– 107mm multi barrel rocket launchers, 15

– 122mm howitzers, 20

– 152mm artillery guns, 4

– தரையில் இருந்து வானத்துக்கு ஏவப்படும் விமான எதிர்ப்பு ஸ்டிங்கர் ஏவுகணைகள், 10

– SA-14 ஏவுகணைகள், 12

– Ack Ack துப்பாக்கிகள், குறைந்தபட்சம் 40.

– கடல் புலிகளில் போராளிகளின் எண்ணிக்கை, 1,250.

– கார்கோ (ஆயுதக் கடத்தல்) கப்பல்கள், 8.

– வேகத் தாக்குதல் படகுகள் (fast attack crafts), 30.

– போராளிகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து படகுகள், 20.

– ஃபைபர் கிளாஸ் படகுகள், தற்கொலை தாக்குதல் படகுகள், ஏராளமான எண்ணிக்கை.

– ராடார்கள், 50.

இந்த கணிப்பீடு செய்யப்பட்ட நேரத்தில், புலிகளின் விமானங்கள் பற்றிய தெளிவான தரவுகள் இலங்கையிடம் இருக்கவில்லை.

இவ்வளவு பலம் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த முனையில் வெற்றி கொள்ள மேலதிகமாக தமக்கு தேவைப்படும் யுத்த சாதனங்கள் என இலங்கை குறிப்பிட்ட பட்டியலையும், அந்தக் கோரிக்கைக்கு இந்தியா கொடுத்தவை எவை என்பதையும், கட்டுரையின் அடுத்த பாகத்தில் தருகிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published.