யுத்தப் பாதிப்புக்களை பெரிதும் எதிர்நோக்கி 12 வருடங்களின் பின் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முகமாலை மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அம்மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
முகமாலை கிராமத்துக்கு கடந்த 2ம் திகதி சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்பட்ட குழுவினர், மக்களைச் சந்தித்ததுடன் புலம் பெயர் உறவுகளின் நம்பிக்கை ஒளி என்னும் அமைப்பின் நிதிப்பங்களிப்பின் மூலம் அங்குள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கியிருந்தார்கள்.
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
“நாம் கடந்த கால யுத்தங்களால் எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்களாகவும் எமது உறவுகளை இழந்தவர்களாகவும் காணப்படுகின்ற போதிலும், எமது எதிர்காலச்சந்ததி தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக நம்பிக்கையோடு செயற்பட்டு வருகின்றோம்.
எமது இழப்புக்களும், தியாகங்களும் என்றைக்கும் வீண்போகாது. இந்த முகாமாலை மண்ணும் மக்களும் பல்வேறுபட்ட இழப்புக்களையும் இன்னல்களையும் சந்தித்தவர்கள். இந்த மாணவர்கள் கல்வி கற்று எதிர்காலத்தில் உயர்நிலை அடையவேண்டும் என்பதே எமது எல்லோரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்காகவே புலம்பெயர் உறவுகள் நம்பிக்கை ஒளி என்னும் அமைப்பின் ஊடாக இந்த உதவிகளை வழங்கியுள்ளார்கள். இதற்கு நீங்கள் செய்யும் பிரதியுபகரமாக கற்று முன்னுக்கு வரவேண்டும். உங்களது கல்விக்காக எம்மால் ஆன உதவிகளை எதிர்காலத்திலும் செய்வோம் என்றார்.
இந்நிகழ்வானது முகமாலை கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக்கிளை செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை,கூட்டமைப்பின் பச்சிலைப் பள்ளிப் பிரதேச அமைப்பாளர் எஸ்.சுரேன், ஆசிரியர் சாந்தன் உட்பட்டோருடன் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து முகமாலை கிராம மக்களின் இருப்பிடங்களுக்கு நேரில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம், மக்கள் தமது அடிப்படைத் தேவைகள் குறித்தும் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துக்கூறியுள்ளனர்.