ரூ.1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடி: 5 இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் கைது

ரூ.1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடி: 5 இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் கைது

அமெரிக்காவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 5 பேர் உள்பட 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியாக இது கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி அடையாள அட்டைகள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். வரவுசெலவு விவரங்களையும் போலியாகக் காட்டி, கிரெடிட் கார்டின் செலவு செய்யும் வரம்பையும் அதிகரித்துள்ளனர். இவ்வகையில், 20 கோடி அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.1,063 கோடி) அதிகமாக மோசடி செய்துள்ளனர். பணத்தை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக, அமெரிக்க அரசு வழக்குரைஞர் பால் பிஷ்மேன் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலி அடையாளங்கள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். பின்னர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவு செய்துள்ளனர். இது திட்டமிட்டு, அமெரிக்க நிதி அமைப்புகள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல். இதனால், அமெரிக்க குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7,000 போலி அடையாள அட்டை, ஆவணங்களைப் பயன்படுத்தி, 25,000 கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளனர் என்றார். இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ருமேனியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், 14 பேரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எட்டுப் பேர் விடுவிக்கப்பட்டனர்; 6 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், பாபர் குரேஷி (59), இஜாஸ் பட் (53), ரக்பிர் சிங் (57), முகமது கான் (48), சாத் வர்மா (60), விஜய வர்மா (45) தர்சீம் லால் (74), வினோத் தத்லானி (49) ஆகியோரும் அடங்குவர். இவர்களில் 5 பேர் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.