கோட்டாவின் கூற்றுக்கு இந்தியாவும் ICRCயும் மௌனம் ஏன்? உண்மையா? பதில் எங்கே! சுரேஸ்

கோட்டாவின் கூற்றுக்கு இந்தியாவும் ICRCயும் மௌனம் ஏன்? உண்மையா? பதில் எங்கே! சுரேஸ்

இறுதி யுத்தத்தின் போது புலிகள் சரணடைந்திருந்தாலும் சாதாரண மக்கள் சரணடைந்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். என்பதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் கூற்றுக்கு இந்தியாவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் பதிலளிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரு அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் முன்னுக்கு பின் முரண்படுகின்றன என்பதனால் இவைத்தொடர்பில் சர்வதேசம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது.

கொழும்பிலுள்ள அசாத் சாலி நிலையத்தில் ‘அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தக்காலத்தில் அல்லது அதற்கு முன்னரோ இன்றேல் யுத்தக்காலத்திற்கு பின்போ பலர் காணாமல் போயிருக்கின்றனர். அவ்வாறு காணாமல் போனாவர்கள் தொடர்பில் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் எவ்விதமான நம்பகத்தன்மையும் இல்லை. இந்த இரண்டு அறிக்கைகளிலும் வெளியாகியுள்ள விபரங்கள் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றன. இவைத்தொடர்பில் சர்வதேசம் விசாரணைகளை நடத்தவேண்டும்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்ச்சியாகவே மீறப்பட்டுவருகின்றன. நாட்டில் இராணுவ அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் மக்களுக்கு வழங்காது இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றது. இராணுவ முகாம்களை விஸ்தரித்துக்கொள்ளும் வகையில் முட்கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எதிர்வரும் 15 ஆம் திகதி வலிவடக்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிட்;டுள்ளோம்.

அத்துடன் ஜனாதிபதியின் 65 ஆவது சுதந்திர உரையின் மூலமாக அதிகாரத்தை பகிர்ந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தாம் தயாரில்லை என்பது புலனாகின்றது.

இவ்வாறான நிலைமை நீடிக்குமாயின் நாட்டில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளும் இடைவெளிகளும் அதிகரிப்பதுடன் முறிவுகளும் ஏற்படும். இராணுவத்தின் அத்துமீறிய செயற்பாடு வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் வாழ்கின்ற மக்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.