சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை வங்கியின் கிளைக்குள் நுழைந்து இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை இந்தியா செல்ல உள்ளார். அவரது விஜயத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாளை திருப்பதியில் ராஜபக்சவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டமும் டெல்லியில் பிரதமர் வீட்டை வைகோ தலைமையில் முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் இலங்கை வங்கியின் கிளைக்குள் இன்று பிற்பகல் 15 பேர் கொண்ட குழு நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் வங்கியின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. வங்கிப் பணியாளர்கள் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.