விளையாட்டாக தொடங்கப்பட்ட முகப்புத்தகம் எனப்படும் பேஸ்புக் தனது போட்டியாளர்களை திணறடித்து கொண்டிருப்பது பலத்த உண்மை அந்த வகையில் பேஸ்புக் தனது படிக்கற்களை தாண்டி பலத்த வளர்ச்சி அடைந்துள்ள இந்த நேரத்தில் தனது 9 ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளது.
லைக் என்ற மந்திரப் பொத்தான் மூலம் நூறு கோடி மக்களை கட்டிப்போட்டிருக்கும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது 9-வது பிறந்தநாளை திங்கள்கிழமை(04.02.2013) கொண்டாடியது.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு மாணவராக இருந்த மார்க் ஸக்கர்பர்க், 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி விளையாட்டாக தொடங்கிய இந்த இணையதளத்தின் இப்போதைய மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பேசுவதற்கு நண்பர்கள், நினைத்ததை எழுதுவதற்கு (வால்)”Wall”, பிடித்ததை பகிர்வதற்கு (ஷேர்)”Share” போன்ற வசதிகளுடன் பலரின் நிஜ வாழ்வுடன் ஒன்றிப்போன பேஸ்புக், கடந்த சில ஆண்டுகளில் இணையதள ஊடகம் என்பதன் பொருளையே மாற்றியமைத்துள்ளது. இதன் லைக் பொத்தான் மட்டும் ஒரு லட்சம் கோடி முறை அழுத்தப்பட்டுள்ளது.
தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் கூட நிறைவடையாத இந்த இணையதளத்துடன் போட்டியிடமுடியாமல் கூகுள் போன்ற ஜாம்பவான்கள் கூட திணறி வருகின்றனர். பலர் போட்டிக்கே வரவில்லை. தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல், அரபு எழுச்சி முதல் அண்ணா ஹசாரேயின் புரட்சிவரை சர்வதேச அரசியலுக்கான களமாகவும் பேஸ்புக் இருந்துள்ளது.