
அப்போது ”தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச இனி இந்தியா வந்தால், அதைக் கண்டிக்கும் விதமாக பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்” என்று அறிவித்தார் வைகோ.
இந்த நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி ராஜபக்ஷே திருப்பதி வந்து சாமி கும்பிடுகிறார் என்றவுடன், பிரதமர் வீடு முற்றுகைப் போராட்ட அறிவிப்பை உறுதிபடுத்தினார் வைகோ.
டெல்லி போராட்டத்துக்காக தமிழகம் முழுக்க இருந்து 500 பேர் ரயில் மூலம் கடந்த 5-ம் தேதி புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்துச் சென்றவர்களை வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
”இலங்கையில் 1,607 இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டுள்ளதை நாடாளுமன்றத்தில் சிங்கள அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தமிழர்கள் வழிபாட்டுத் தலங்களில் சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிது புதிதாக புத்த விகாரைகள் கட்டப்படுகிறது. இந்துக் கோயில்களை உடைத்து நொறுக்குபவன், திருப்பதிக் கோயிலுக்கு உள்ளே நுழைவதை மட்டும் அனுமதிக்கலாமா?” என்கிறார் வைகோ ஆவேசமாக.
சென்னையில் கடந்த 4-ம் தேதி கருணாநிதி தலைமையில் நடந்த டெசோ ஆலோசனைக் கூட்டத்தில், ”இலங்கை அதிபர் இந்தியா வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. அவர் வருகையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவரது வருகையைக் கண்டித்து, சென்னையில் 8-ம் தேதி கறுப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று போராட்டத்துக்கு தி.மு.க-வும் தேதி குறித்தது. விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் ஈழ ஆதரவு அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என போராட்டங்களைக் கையில் எடுத்தனர்.
சென்னை எழும்பூரில் உள்ள் பாங்க் ஆஃப் சிலோன் கிளைக்குள் 7-ம் தேதி மதியம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.
திருப்பதி வரும் ராஜபக்ஷேவைக் கண்டித்து தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்பு 7-ம் தேதி தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் வேலுமணி, ”இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ராஜபக்ச நுழைய முடியாத நிலை உருவாகி உள்ளது.
அமைதியை நாடும் உலக நாடுகளால் வெறுக்கப்படும் ராஜபக்சவை, மத்திய அரசு வரவேற்கிறது. இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியாவே உறுதுணையாக இருக்கிறது என்று உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தவே, ராஜபக்ச அடிக்கடி இந்தியா வருகிறார்.
தமிழகத்துக்கு அருகில் உள்ள, தமிழர்களால் கட்டப்பட்ட திருப்பதிக்கு ராஜபக்ஷே வரும்போது அவரைப் பாதுகாப்பதற்கு முஸ்தீபு காட்டும் அளவுக்குக்கூட, ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
குஜராத்தில் பூகம்பம், கார்கில் பிரச்னை என்றால் இந்தியன் என்ற உணர்வோடு தமிழர்கள் ஓடோடிச் சென்று நிதி கொடுக்கிறோம். உதவி செய்கிறோம். ஆனால், தமிழர்களுக்குக் குரல் கொடுக்க மற்ற திராவிடர்கள்கூட முன்வரவில்லை.
இந்திய அரசும் உதவ மறுக்கிறது. பிற மாநிலங்களின் ஆதரவும் இல்லை. இந்த நிலையில் தனித் தமிழ்நாடு கோரிக்கை தானாகவே எழுந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதை செய்ய இந்திய அரசே தூண்டுவதுபோல அவர்களின் செயல்பாடும் இருக்கிறது” என்று வருத்தப்பட்டார்.
அண்டை நாட்டு உறவு என்ற பெயரில், கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கொடுமையை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மத்திய அரசு தொடரப் போகிறதோ..!
ஜூனியர் விகடன்