அஜெக்ஸ்-பிக்கறிங் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழரின் மனித உரிமை விவகாரங்களில் அதிக அக்கறையும் முனைப்பும் காட்டி வருபவருமான கொன்சவ்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த கௌரவ கிறிஸ் அலெக்சாந்தர் அவர்கள், இன்று கனடிய நாடாளுமன்றத்தில் தமிழர் மரபுரிமை மாதத்தையொட்டி, தமிழர்களுக்கு தமது தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கனடிய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் அலக்சாந்தர் அவர்கள் வழங்கிய அறிக்கையின் தமிழ் வடிவம் வருமாறு:
‘சபாநாயகர் அவர்களே,
கடந்த பல வாரங்களாக தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தைப்பொங்கல் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பாக எனது அஜெக்ஸ்-பிக்கறிங் தொகுதியில், டூறம் தமிழ் சங்கமும், டூறம் தமிழ் கலாச்சார மற்றும் அறிவுசார் சமூகமும் இணைந்து மிகத் திறம்பட நடாத்திய பொங்கல் நிகழ்வில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளும் மரபும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன.
தெற்காசியாவிற்கு வெளியே, அதிகூடிய எண்ணிக்கையிலான தமிழர்கள் தங்கள் சொந்த நாடாகக் கருதி வாழும் கனடிய நாட்டின், ரொறன்ரோ பெரும்பாகத்தில் கடந்த ஜனவரி 9ம் திகதி, தமிழர்களின் மரபுரிமை மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதில் நான் பெருமையடைந்தேன். இத்தகைய சிறப்பான முன்னெடுப்பு, எனது சொந்தத் தொகுதியான டூறம் பகுதியில், பிக்கறிங், அஜெக்ஸ், விற்பி, ஒசாவா போன்ற நகரங்களிலும், பின்னர் ரொறன்ரோ, பிறம்ரன், மார்க்கம் போன்ற நகரங்களிலும் வெற்றியுடன் மேற்கொள்ளப்பட்டன.
தைப்பொங்கலின் போது, தமிழ் கனடியர்கள் தங்களுக்குக் கிடைத்த அத்தனை நன்மைகள், வளங்கள், மற்றும் அபரிமிதமான அறுவடைகளுக்காக நன்றி கூறுகிறார்கள். கடந்த காலத்தைப் பின்னே தள்ளி, புதிய சாதகமான சூழ்நிலைகளுக்குத் தம்மைத் தயார் செய்கிறார்கள்.
துரதிஸ்டவசமாக, சிறீலங்காவில் இடம்பெற்ற மிகநீண்ட போருக்குப் பின்னதான கடந்த நான்கு வருட காலத்தில், தமிழர்களுக்கு ஒரு புதிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதில் சிறீலங்கா அரசு தோல்வி அடைந்திருக்கிறது. அங்கு நடைபெற்றதாக நம்பப்படும் போர்க் குற்றங்களுக்கும் பாரிய மனிதப் படுகொலைகளுக்கும் பொறுப்புக் கூறுவதற்கு சிறீலங்கா அரசு தவறியுள்ளது, அங்கு இனங்களுக்கிடையில் ஒன்றுமையைக் கொண்டுவருவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சிறீலங்காவில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகிறது. அண்மையில் சிறீலங்காவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்க கட்டாய பதவி நீக்கம் செய்யப்பட்டமை மூலம், சிறீலங்கா அரசு உரிய சட்டதிட்டங்களை மதிக்காது அவமதித்துள்ளது.
இங்கு வாழும் தமிழ் கனடியர்கள் அனைவருக்கும், மகிழ்வான தைப்பொங்கல் வாழ்த்துக்களையும், சிறப்பான மரபுரிமை மாதத்தின் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன், எனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் என்னுடன் இணைந்து வாழ்த்துக்கூற அன்போடு அழைக்கிறேன்.’
இவ்வாறு அஜெக்ஸ்-பிக்கறிங் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கிறிஸ் அலெக்சாந்தர் நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.