சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த ‘பிளைட்’ ஹாலிவூட் திரைப்படத்தில், டென்ஸெல் வாஷிங்டன் போதையில் விமானம் செலுத்தும் பைலட்டாக நடித்திருப்பார். அது வெறும் ஹாலிவூட் கற்பனை என்று சொல்லிவிட முடியாதபடி, நிஜ போதை பைலட் ஒருவர், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
ரொமேனியா நாட்டு Tarom விமான நிறுவனத்தில் ஏர்பஸ் A318 விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்த நிலையில், ஏர்போர்ட் அதிகாரிகள், அதன் விமானி விமானத்தை செலுத்திச் செல்வதை தடைசெய்திருக்கிறார்கள்.
இதனால், லண்டனில் இருந்து புசாரெஸ்ட் நகருக்கு காலை புறப்படவிருந்த விமானம் கேன்சலாகியுள்ளது.
லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட் அதிகாரிகள் செய்துவரும் ‘ரான்டம் செக்கிங்’கின் போது, புறப்பட தயாராகவுள்ள விமானங்களில் ஏறி பைலட்டுகள் ‘பறக்கும் நிலையில்’ உள்ளார்களா என செக் பண்ணுவதும் உண்டு. இப்படி நடத்தப்பட்ட செக்கிங்கில், புசாரெஸ்ட் நகருக்கு காலை புறப்படவிருந்த Tarom விமானத்தில் பைலட், அளவுக்கு அதிகமான போதையில் உள்ளது தெரியவந்தது.
அதையடுத்து அவர் அந்த விமானத்தை செலுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட, உடனடியாக வேறு விமானி இல்லாத காரணத்தால் விமானம் கேன்சலானது. “விமானி பறக்கும் நிலையில் இல்லை” என் காரணமும் சொல்லப்பட்டது.
விமானி, மறுநாள் காலை புசாரெஸ்ட் நகரில் போய் இறங்கியுள்ளார். தற்போது பணியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து வரவுள்ள மெடிகல் ரிப்போர்ட்டில் அவர் போதையில் இருந்தது உறுதியானால், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார் என அறிவித்துள்ளது ரொமேனியா நாட்டு அரசுக்கு சொந்தமான Tarom விமான நிறுவனம்.