பிரிட்டனுடன் இணைந்து ஒரு மாநிலமாக உள்ள ஸ்காட்லாந்து, எதிர்வரும் 2014 வசந்தகாலத்துக்குள் சுதந்திரமான தனி நாடாகப் பிரிந்து செல்வதற்கு திட்டமிட்டு தனது கோரிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது.
மறுபக்கத்தில் சுதந்திரமான ஸ்காட்லாந்து எனும் கண்ணோட்டம் சர்வதேச சட்டத்தின் கீழான தனித்த மாநிலமாகவே கருதப்பட வேண்டும் என சட்டபூர்வமான கருத்து பிரிட்டன் அமைச்சர்களால் வெளியிடப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வதற்காக மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை 2014 இல் ஸ்காட்லாந்து நடத்தவுள்ளது.
இந்நிலையில் ஸ்காட்லாந்தின் சுதந்திரக் கோரிக்கையை எதிர்க்கும் விதத்தில் பிரிட்டன் அரசு தயாரித்துள்ள ஆவணங்களின் முதற் பகுதி நேற்று வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் இரு சர்வதேச சட்ட நிபுணர்கள் பின்வரும் கருத்தைக் கூறியுள்ளனர்.
‘அதாவது ஸ்காட்லாந்து தனி நாடானால் சர்வதேச நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் உறுப்பினராவதற்கு புதிய நாடு போல் விண்ணப்பிக்க நேரிடும் எனவும் இதை நிறைவேற்றுவது அதற்கு கடினமான காரியம்’ என்பதாகும்.
இதேவேளை இங்கிலாந்துடன் வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து தொடர்ந்து ஐக்கிய இராச்சியமாகவே (UK)இருக்கும் எனவும் இதனால் ஏற்கனவே தாம் அனுபவிக்கும் அந்தஸ்துக்கள், உரிமைகள் ஆகியவை இவற்றுக்கும் கிடைக்கும் எனவும் பிரிட்டன் சுட்டிக் காட்டியுள்ளது.