Search

மர்ம கப்பல் முழுக்க ஏவுகணைகள், ராக்கெட்டுகள்! உரிமையாளர் யார் என்று தெரியாது!!

“தமது கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பற்றி ஈரான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று ராஜதந்திர ரீதியாக விளக்கம் கேட்டுள்ளது, ஏமன் அரசு. “இது போன்ற ‘தீவிரவாத விளையாட்டுகளுக்கு’ ஈரான் எமது கடல் பகுதியை பயன்படுத்துவதை இனியும் அனுமதிக்க முடியாது” என சூடான வார்த்தைகளால் எச்சரிக்கையும் விடுத்துள்ளது ஏமன் அரசு.

ஏமன் கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த ஜிஹான்-II என்ற கப்பல்மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, ஏமன் அதிகாரிகள் கப்பலை தடுத்து நிறுத்தினர். அதன்பின், அமெரிக்க கடற்படையினரின் உதவியுடன் இந்தக் கப்பலில் ஏறி சோதனையிட்டனர்.

கப்பலில் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், மற்றும் வெடிபொருள்கள் இருந்தன. கப்பலை பறிமுதல் செய்து, தமது துறைமுகத்துக்கு கொண்டுவந்த ஏமன் அதிகாரிகள், கப்பலில் இருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினர் (மேலேயுள்ள போட்டோ).

கப்பல் மாலுமிகளிடம் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், ஆயுதங்கள் ஈரானில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

ஏமன் தலைநகர் சானாவில் உள்ள ஈரானிய தூதரை தமது அலுவலகத்துக்கு அழைத்த ஏமன் வெளியுறவு அமைச்சர் அபு பக்கர் அல்-குர்பி, “இந்த ஆயுதங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும்” என்று கடுமை காட்டினார். ஆனால், ஈரானிய தூதர் மஹ்முத் ஹசன் ஸாடா, “இந்த ஆயுதங்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கப்பல் மாலுமிகள் பொய் சொல்லியிருக்கலாம்” என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.

ஜிஹான்-II கப்பலும், அதில் ஏற்றிவரப்பட்ட ஆயுதங்களும், தற்போது ஏமன் அரசு வசம் உள்ளன.

உளவு வட்டாரங்களில் அடிபடும் கதையின்படி, இந்த ஆயுதங்கள் ஏமன் நாட்டு வட பகுததியில் உள்ள ஹூத்தி தீவிரவாத அமைப்புக் சென்றுகொண்டிருந்தது. ஷியா பிரிவு தீவிரவாத அமைப்பு அது. ஆயுதங்கள் சாடா என்ற இடத்தில் இறக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குமுன், சி.ஐ.ஏ. தகவல் கொடுத்து, ஏமன் கடற்படை அதிகாரிகள் கப்பலை மடக்கி விட்டனர்.

கப்பலில் இருந்தவர்கள் திருப்பி தாக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றும் ஏமன் அதிகாரிகளுடன் சென்றது. ஆனால், தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

“கப்பல் மாலுமிகளை தொடர்ந்தும் விசாரிக்கிறோம்” என்று கூறியிருக்கிறது ஏமன். விசாரித்து என்ன பலன்? “ஆயுதங்களை நாம் அனுப்பவில்லை” என்ற பதில்தான் ஈரானிடம் இருந்து வரும்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *