ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களையும் பயங்கரவாத் தடுப்புப் பிரவினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தனர்.
மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி, காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது, மாணவர்களின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளுர் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஆகிய சம்பவங்களின் அடிப்படையில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் இரண்டு மாணவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இரண்டு மாணவர்களும் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.