நல்லிணக்க முனைப்புக்களை சர்வதேச மயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்கம் யுத்தத்தின் பின்னர் பாரியளவில் நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறுகிய காலத்தில் பாரியளவிலான அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு அரசாங்கம் முழு அளவில் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், அதன் பின்னரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு ஜனவரி முதல் 2009ம் ஆண்டு மே வரையில் வட மாகாணத்தில் 119 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் 5 சம்பவங்கள் தொடர்பில் ஏழு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே முதல் 2012ம் ஆண்டு மே வரையில் 256 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பில் 367 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் 6 சம்பவங்கள் தொடர்பில் பத்து பாதுகாப்பு உத்திதுயோகத்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மொத்த குற்றச் செயல்களில் 3.3 வீதமும் அதன் பின்னர் 5.6 வீதமும் படையினருக்கு எதிராக பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.பாதுகாப்புப் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இராணுவ சட்டத்திற்கு அமையவும் நாட்டின் சிவில் சட்டங்களுக்கு அமையவும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறிய நாடு என்பதனால் சில சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களில் பாரியளவில் பிரச்சாரம் செய்யப்படுவதாக டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.