கடந்த 7 மாதங்களில் 7 தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் வரலாற்றிலேயே இவ்வளவு வேகமாக எந்த ஒரு கருணை மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த 4 பேரும் இன்னும் 14 நாட்களில் தூக்கிலிடப்படுவர் என்று கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ககந்தீப் கூறியுள்ளார்.
வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன் மற்றும் ஞானபிரகாசம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த கருணை மனுக்களே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப் பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர்.
இத்தகவலை உறுதிசெய்த கர்நாடகா சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பிஇ ககந்தீப், “கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்னும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும். 14 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற, தூக்கு போடுவதற்கான தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயிப்பார்” என்று தெரிவித்தார்.
தற்போது பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த 4 பேரும் பெல்காம் சிறையிலேயே தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிகிறது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்காம் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.