அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் கட்டுப்படுத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறை பதவியேற்றபின் ஒபாமா பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முதற்தடவையாக பேசும்போது அமெரிக்காவில் கடந்த ஆண்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குறிப்பாக நியூ டவுன் துப்பாக்கி சூட்டில் பள்ளி குழந்தைகள் பலியானதை சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் இதுபோன்று நடப்பது முதல் தடவை அல்ல என்றாலும் தற்போது நடைபெறுவது வித்தியாசமானது. எனவே, துப்பாக்கி வன்முறையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
மேலும் பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறையில் 60 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
உலகிலேயே செல்வவளம் மிக்க நாடான அமெரிக்காவில் யாரும் வறுமையில் வாடக்கூடாது. எனவே குறைந்தபட்சமாக சம்பளம் மணிக்கு 9 டொலராக அதிகரிக்கப்படும்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 66 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்களில் 34 ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள்.
பின்னர் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்பட்டு அங்கு தீவிரவாதிகளுடனான போர் ஆண்டு இறுதியில் முற்றிலும் நிறுத்தப்படும்.
அமெரிக்கா வளர்ச்சிக்கு வரி மற்றும் கல்வியில் மாற்றம் கொண்டு வரப்படும். அணுகுண்டு சோதனை நடத்திய வடகொரியா மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடக்கத்திலேயே குழந்தைகளுக்கு தரமான கல்வி கற்றுக் கொடுக்கப்படும். அதன் மூலம் குற்றங்கள் குறையும்.
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.