சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி தலாய் லாமா தலைமையிலான புத்த துறவிகள் போராடி வருகின்றனர்.
கடந்த, 2009ல் இருந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி புத்த துறவிகள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இந்நிலையில், தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க சீன அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்கொலை செய்ய தூண்டியதாக திபெத் துறவிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில், சிஷூவான் மாகாணத்தில் தீக்குளிப்பை தூண்டியதாக திபெத்தை சேர்ந்த புத்தமத துறவி ஒருவருக்கு மரணதண்டனை விதித்து சீன நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், கடந்த 13ம் திகதி 20 வயது புத்த துறவி ஒருவர் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனாவுக்கெதிராக போராட்டத்தில் தீக்குளித்து உயிரிழந்த 100வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.