திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா

திருச்செந்தூர், பிப்.17 – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருக பெருமானின் 2​ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் ஊர்வலமாக ஒன்பது சந்திகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர் கோவில் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காலை 5.15 மணிக்கு சந்தோஷ்குமார் பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புல்லால் அலங்கரிக்கப்பட்டது. கொடி மர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மேலும், பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரால் அபிஷேகம் நடைபெற்றது. பட்டு ஆடைகளாலும், வண்ண மலர்களாலும் கொடிமர பீடம் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து சோடச தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்கு வகை வேதங்கள் பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.