பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க மறுத்து, ஷியா பிரிவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் நீதி கேட்டு வீதியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
குவெட்டா நகரின் ஹாசாராவில் கிரானி சாலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் குண்டுவெடிப்பில் 89 பேர் பலியாகினர் என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. 200 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷியா பிரிவு மக்களை பெரும்பான்மையாக கொண்ட நகரத்தில், தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மக்கள் மீது நடத்தியிருந்தனர்.
ஷியா பிரிவு மக்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்கு, சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பு லஷ்கர்-இ-ஜங்க்வி உரிமை கோரியிருந்தது.
இந்தத் தாக்குதலுக்காக, வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, ரிமோர்ட் மூலம் வெடிக்க செய்யப்பட்டது. குண்டு வெடிப்பிற்கு 100 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. சன்னி பிரிவு தீவிரவாத அமைப்புகளின் வழமையான தாக்குதல் உத்தி இது. மேலேயுள்ள போட்டோவை பார்க்கவும்.
தற்போது இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர்களின் உடல்களை புதைக்க மறுத்து ஷியா பிரிவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு 48 மணி நேரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.
சன்னி பிரிவு தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு, பெரிதாக நடவடிக்கை எடுத்துவிட முடியாது. பாக். உளவுத்துறை மற்றும், ராணுவத்தில், சன்னி பிரிவு தீவிரவாத அமைப்புகளுக்கு அபிமானிகள் உள்ளனர்.