போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது!- சனல்-4 ஊடகத்தின் இயக்குனர்

இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக்க முடியாது என சனல்-4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மக்ரே தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மணல் மூடைகளுக்கு நடுவே பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பிரபாகரன் மகன் குறித்து வெளியான படம் போலியானது என்று இலங்கைத்தூதர் பிரசாத் கரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் அமைதியை குலைக்க சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் “இலங்கையின் கொலைக்களங்கள்” பற்றி வெளியிட்ட சனல்-4 ஆவணப்பட இயக்குனர் கெல்லம் மக்ரே, பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட படம் உண்மையல்ல என்ற இலங்கை அரசின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்துள்ளார்.

மேலும் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்வதில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது எனவும் போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் மகன் கொலை மட்டும் அல்ல, பாலியல் வன்கொடுமை, சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்றதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் கெல்லம் மக்ரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.