இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு வலுவான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டுமென மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பேராயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பல மதகுருமார் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மனித உரிமை மீறல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இம்முறை மனித உரிமைப் பேரவை தீர்மானம் வலுவாக அமைய வேண்டுமென குறிப்பிட்டு;ள்ளனர்.மன்னார் ஆயர் உட்பட மதகுருமார்களும் அருட்சகோதரிகளுமாக 133 பேர் கையெழுத்திட்டு கடிதம் மூலமாக இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள்.
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட மிகவும் மென்போக்கான பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
´´இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்களைக் கவனிப்பதற்கான ஆணையாளர் ஒருவரை நியமித்தல் போன்ற பிரிந்துரைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் அக்கறை கொண்டுள்ள அதேவேளை, ஒட்டுமொத்த நாட்டில் அதிகரித்து வரும் சர்வாதிகாரத்தனம் குறித்தும் தாங்கள் கவலையடைந்திருப்பதாகவும் கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால தாக்குதல்கள், 27 சிங்கள கைதிகள் கொல்லப்பட்டமை, சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்ற மனித எச்சங்கள், மாத்தளை மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டமை, அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர் தலைவர்கள், மதகுருமார் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் குறித்தும் தாங்கள் கரிசனை கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.