சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை தொடர்பில் உறுப்பு நாடுகளின் வாதப்பிரதி வாதங்களை அடிப்படையாகக் கொண்டு திருத்தங்களை மேற்கொள்வதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இறுதியானதொரு முடிவை எடுக்கவுள்ளது அமெரிக்கா. ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையின் நகலை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.
குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் அங்கத்துவ நாடுகளின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்காகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.
இதன்பிரகாரம் குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர், அதுதொடர்பில் தமது நிலைப்பாட்டை அங்கத்துவ நாடுகள் அமெரிக்காவிடம் இராஜதந்திர மட்டத்தில் தெரிவிக்கவுள்ளன.
இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கென வெள்ளை மாளிகை நிர்வாகத்தால் களமிறக்கப்பட்டுள்ள விசேட இராஜதந்திரிகள் குழுவிடமே ஐ.நா. மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள் பிரேரணை தொடர்பில் தமது கருத்துகளை முன்வைக்கவுள்ளன.
அடுத்தவார இறுதிக்குள் அங்கத்துவ நாடுகள் தமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிபந்தனையாகும். உறுப்பு நாடுகளின் வாதப்பிரதிவாதங்களை அடிப்படையாகக் கொண்டே பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்வதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அமெரிக்க இறுதியானதொரு முடிவை எடுக்கவுள்ளது.
அத்துடன், சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையின் நகலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமும் அமெரிக்கா கையளித்துள்ளது.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்றை அனுப்புவதற்கு சிறிலங்கா அரசு முன்னதாக தீர்மானித்திருந்தாலும் தற்போது அதுகுறித்து மீள்பரிசீலித்து வருகின்றது.
அமெரிக்காவின் இவ்வாறான அதிரடியான செயற்பாடுகளால் அதிர்ச்சியடைந்துள்ள அரசு, அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை ஜெனிவாத் தொடருக்கு அனுப்புவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது. நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டே தனது முன்கூட்டிய முடிவை சிறிலங்கா அவசர அவசரமாக மீள்பரிசீலித்து வருகின்றது.
இந்த விடயம் சம்பந்தமாக அது விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் இறுதிவாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இருப்பினும் இலங்கை விவகாரம் மார்ச் மாதம் 15 ஆம் திகதியளவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இம்முறை அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை கடந்த முறையைவிட கூடுதலான வாக்குகளால் நிறைவேற்றப்படும் என மேற்குலக இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏனெனில், சுழற்சி முறையிலான அங்கத்துவத்தில் அடிப்படையில் சிறிலங்காவின் நட்பு நாடுகள் சில மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறுகின்றன. சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் அதில் பிரதானமானவை.
அத்துடன், இம்முறை மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவத்தை பெறவுள்ள நாடுகள் இலங்கைக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.