பெல்ஜியம் நாட்டின் விமான நிலையத்தில் பொலிஸ் உடையில் நுழைந்த 8 பேர் சுமார் 50 மில்லியன் டொலர் (ரூ.272 கோடி) மதிப்புள்ள வைரங்களை ஐந்தே நிமிடத்தில் கொள்ளையடித்துச் சென்றனர்.
பெல்ஜியத்தின் தலைநகரான புருசெல்சில் உள்ள விமான நிலையத்திலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகருக்கு புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்தின் அருகே விலை மதிப்புள்ள சரக்குகளை கையாளும் ‘பிரிங்க்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான பாதுகாப்பு வான் ஒன்று வந்து நின்றது.
வானில் இருந்த 120 பார்சல்கள் விமானத்தில் ஏற்றப்பட்டன. பின்னர், அந்த வான் சென்ற சிறிது நேரம் கழித்து அதே நிறுவனத்தின் வான் விமான நிலைய ஓடுபாதையின் அருகே இருந்த தடுப்பு சுவற்றை உடைத்துக்கொண்டு விமானத்தின் அருகே வந்து நின்றது. வானில் வந்த 8 பேர் பொலிஸ் உடையில் இருந்தனர்.
முகமூடி அணிந்திருந்த அவர்கள் விமானத்தின் சரக்கு பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டினர்.
சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்றப்பட்ட 120 பார்சல்களையும் விமானத்தில் இருந்து இறக்கி, மீண்டும் வானுக்குள் ஏற்றிக்கொண்டு வானால் மோதி உடைக்கப்பட்ட மதில் சுவற்றின் வழியாக மின்னல் வேகத்தில் வானில் தப்பி தலைமறைவாகினர்.
அவர்கள் கொள்ளை அடித்துச்சென்ற 120 பார்சல்களிலும் சுமார் 50 மில்லியன் டொலர் (ரூ.272 கோடி) மதிப்புள்ள வைரங்கள் இருந்தன. அவர்கள் யாரையும் காயப்படுத்தவோ, துப்பாக்கியால் சுடவோ முயற்சிக்கவில்லை.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் கொள்ளை போனதை அறிந்த பொலிசார் சுதாரித்துக் கொண்டு புருசெல்ஸ் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியும் இந்த அதிரடி கொள்ளை தொடர்பாக இதுவரை யாரும் பிடிபடவில்லை.
கொள்ளையடிக்கப்பட்ட வைரங்கள் யாருக்கு சொந்தமானவை? எங்கிருந்து? எங்கே எடுத்துச் செல்லப்பட்டன? என்ற தகவல்கள் தெரிவிக்க புருசெல்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.