பிரிட்டன் செல்வந்தர் ரிச்சர்டு பிரான்சன் வருங்கால தலைமுறையினரின் நன்மைக்காக தனது சொத்தில் பாதியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஏழை மக்கள் மற்றும் வருங்கால தலைமுறையினர் பயன் பெறும் வகையில் உலகின் பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொத்தில் ஒரு பகுதியை “கிவிங் ப்ளெட்ஜ்” என்ற அறக்கட்டளையின் கீழ் நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான வாரன் பபெட் ஆகியோரால், கிவிங் ப்ளெட்ஜ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
உலக செல்வந்தர்கள் பலர் இந்த அமைப்புக்கு பெரும் தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டனின் நான்காவது பெரும் பணக்காரர் என்று அறியப்படும் விமான நிறுவன அதிபர் ரிச்சர்டு பிரான்சன், தனது சொத்தில் பாதியை கிவிங் ப்ளெட்ஜ் அமைப்புக்கு நன்கொடையாக வழங்குவதாக அந்த அமைப்புக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரான்சன் கூறுகையில், நானும் என் மனைவி ஜோனும் முதலில் ஒரு படகு வீட்டில் வாழ்ந்தபொழுது ஒரு நாள் அது நீரில் மூழ்கிவிட்டது. அப்போது பல பொருட்களை நாங்கள் இழந்துள்ளளோம்.
பின்னர் பிரிட்டனில் நாங்கள் வசித்த மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
எனவே சொத்துகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல என நினைத்து நாங்கள், கிவிங் ப்ளெட்ஜ் அமைப்பு மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கு உதவும் வகையில் எங்கள் சொத்தில் பாதியை நன்கொடையாக வழங்க முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.