பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்று சொல்வதற்கு கிழக்கு முதலமைச்சருக்கு எந்த தகுதியுமில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே இதனை மிக உரிமையுடன் கூறுகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.
‘கிழக்கு முதலமைச்சரின் தந்தையான முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ரவிராஜ் மற்றும் மகேஸ்வரன் உட்பட பல அரசியல் முக்கிஸ்தர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு யார் காரணம்.
அத்துடன் 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலரத்தின்போது சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு பெற்ற இந்த பொலிஸ் அதிகாரங்களை ஒருபோது மாகாண சபைகளில் இருந்து ஒழிக்க முடியாது’ எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் கல்முனை மேயரும் செனட்டருமான மசுர் மௌலானவின் அகவை என்பது நிறைவு விழா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கபடகரமான உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டன. இந்த தீர்ப்பிற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.
இந்த இரண்டு மாகாணங்களும் ஒற்றுமையாக இருப்பதற்கு பல நியாங்கள் உண்டு. இந்த இரண்டு மாகாணங்கள் இணைவதன் மூலம் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் உண்டு. எனினும் அவற்றை தீர்த்துவைக்க முடியும்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் மறைந்த அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் தலைமையிலான முஸ்லிம் குழுவினர் சென்னை சென்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு பல உரிமைகளை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபுடன் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வந்தோம். அதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கு என மாகாணங்களை உருவாக்குவதாகும். எனினும் அது நிறைவேறவில்லை.
தமிழ் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சமமானதாகும். இது மொழி, கலாசார, தொழில் உள்ளிட்ட பல விடயங்களில் சமனாக காணப்படுகின்றது. ஒற்றுமைப்படுவதன் மூலமே இதனை பெற முடியும். பிரிந்து செயற்படுவதன் மூலம் பெறமுடியாது.
நாங்கள் ஒருபோதும் பெரும்பான்மை இன மக்களை எதிர்க்கவில்லை. அவர்கள் எங்களின் சகோதரர்கள். இது எமது நாடு. அனைத்து இன மக்களும் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ வேண்டும்.
அவற்றுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் நாங்கள் மாற்று நடவடிக்கையினை சிந்திப்பது காலத்தின் தேவையாகும். எமது மக்கள் சம உரிமையுடன் கௌரவமாக வாழ வேண்டும். அதில் தவறில்லை.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் தெரிவித்திருந்தோம். அதன்படி அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்தனர்.
இதனாலேயே அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றார். எனினும் இறுதியாக இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களில் 11 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள்.
இந்த தேர்தலில் தோல்வியடைந்தவரே வெற்றி பெற செய்யப்பட்டுள்ளார். 18ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இவ்வாறான நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்.
குடியேற்றத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அம்பாறை மற்றும் சேருவில ஆகியன தவிர்ந்த ஏனைய எட்டு தொகுதிகளிலும் அரசாங்கம் தோல்வியடைந்தது. இதே நிலையே 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் இடம்பெற்றது.
எனினும், இரண்டு தொகுதிகளில் மாத்திரம் வெற்றி பெற்ற ஆளும் அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இது நியாயமா? இதன் மூலம் மக்களின் ஜனநாயகம் மதிக்கப்படவில்லை.
முஸ்லிம்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் ஒருபோதும் கைவிடமாட்டோம். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
சிங்கள பெயரை கொண்டவர் என்று கவனத்தில் கொள்ளாலம் எஸ். பியசேனவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கினோம். அப்போது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று அவர் நாடாளுமன்ற உறுப்பினரானர். தமிழ் கட்சியில் சிங்கள பெயரை கொண்டவர் இருப்பது சிறந்த விடயமாகும்.
எனினும் பணம் கொடுத்து இந்த அரசாங்கம் அவரை வாங்கிவிட்டது. இது தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்ததற்கு அவர் அமைதியானார்’ என்றார்.